அதிமுக முச்சந்தியில நின்னு மூணு, நாலு துண்டா உடைஞ்சுடும் என்று அரசியல் ஆரூடம் சொல்லி வந்தவர்கள் திருச்சியில் நிகழ்ந்த களேபரத்தை கொஞ்சம் அதிர்ச்சியாக தான் பார்த்தார்கள்.
கடந்த மார்ச் 15ம் தேதியன்று திருச்சி எஸ்பிஐ காலனியில் உள்ள திருச்சி சிவா எம்.பி யின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார், இருசக்கர வாகனம் மற்றும் நாற்காலிகளை அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கினார். திருச்சியில் உட்கட்சி பூசலால் திமுக திணறுகிறது என்றனர். ஒரே தொகுதியில் இரண்டு அமைச்சர்கள், ஒரு எம்.பி., இருந்தா இப்படிதான்யா இருக்கும் என்று மக்கள் புலம்பும் அளவுக்கு விஷயம் பரவியது.
இந்நிலையில், இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க மேலிடம் காய் நகர்த்தியது. இதனைத் தொடர்ந்து எம்.பி சிவாவை, நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு சந்தித்தார். முன்னதாக முசிறி சட்டமன்ற உறுப்பினர் (வடக்கு மாவட்ட செயலாளர்) காடுவெட்டி தியாகராஜன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி ஆகியோர் எம்பி திருச்சி சிவாவின் வீட்டிற்கு வந்தனர். இருவரும் அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் நேரு, திருச்சி சிவா எம்.பி., யின் வீட்டிற்குச் சென்று சுமார் 15 நிமிடங்கள் வரை இருவரும் பேசி கொண்டனர். பின்னர் அமைச்சர் நேருவும், எம்.பி., சிவாவும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
எந்த ஊரில் என்ன நிகழ்ச்சி என்பது கூட எனக்கு தெரியாது. அதிகாரிகள் அழைக்கும் இடத்திற்கு நான் சென்று வருகிறேன். அப்படி தான் ராஜா காலணி பகுதிக்கும் சென்றேன். என்னுடைய திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதி என்பதாலும் சென்றேன். அப்போது சிலர் திருச்சி சிவா பெயரை நிகழ்ச்சியில் போடவில்லை என கேட்டார்கள். அதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் தான் கேட்க வேண்டும் என கூறி விட்டு சென்றேன் என்றார் அமைச்சர் நேரு.
நடக்க கூடாத விஷயம் நடந்து விட்டது. எனக்கு சம்பவம் நடந்த போது தெரியாது. தஞ்சை மாவட்டத்திற்கு சென்ற பின்னர் தான் தெரியும். கம்யூனிகேஷன் இடைவெளியில் இது போல் நடந்தது. கழக குடும்பத்தில் நடக்க கூடாத விஷயம் நடந்து விட்டது. முதல்வர் கேட்டு கொண்டு வேண்டுகோள் விடுத்தார். சிவா எனக்கு தம்பி. சமாதானமாகி விட்டோம். எனக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார் நேரு.
திருச்சி சிவாவை நேரில் சென்று சமாதானம் செய்யுங்கள். அப்பொழுது தான் மக்களுக்கு உங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என தெரியும் என்றார் முதல்வர். அதனடிப்படையில் நான் சந்தித்தேன். இனி இது போல் நடக்காது.
எங்களை பொறுத்தவரை இயக்கத்தின் வளர்ச்சி முக்கியம். இருவரும் வெவ்வேறு பணிகளை செய்து வருகிறோம். அவை அனைத்தும் கழகத்தின் வளர்ச்சிக்கான பணிகள் தான் என்று கண்கள் பணிக்க நேரு பேசினார்.
நடந்தவை நடந்ததாக இருக்கட்டும், நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். நேருவின் பணியை என்னால் ஆற்ற முடியாது. என் பணியை அவரால் செய்ய முடியாது. நாங்கள் இருவரும் ஆற்றக்கூடிய பணி கட்சிக்கான வளர்ச்சிப் பணிகள் என்றார் திருச்சி சிவா.