தமிழில் பெயர் வைக்காவிட்டால் அபராதம்… கடைகள், நிறுவனங்களுக்கு எச்சரிக்கை.!!

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை வைக்காவிட்டால், 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, தமிழ் வளர்ச்சித் துறை அதிரடியாக எச்சரித்துள்ளது.

இதன் காரணமாக பல வணிகர்கள் தங்கள் கடைகளின் பேனர்களை தமிழுக்கு மாற்ற முயன்று வருகின்றனர். அதேநேரம் போதிய அவகாசம் வழங்க வேண்டும் என்றும் வணிகர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

வணிக நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் அனைத்து பொது இடங்களிலும் பெயர் பலகைகள் தமிழ் மொழியில் எழுதப்பட வேண்டும் என்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். தமிழக அரசின் தொழிலாளர் நல ஆணையமும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என்ற விதி பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில் தமிழில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் இனி ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவித்தது. அந்த சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த ஜூலை 18ம் தேதி தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழா காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் ஔவை அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கு பின்னர் பேசிய அமைச்சர் சாமிநாதன், “தமிழ் வளர்ச்சித்துறையும், தொழிலாளர் நலத்துறையும் இணைந்து வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளன. இதனை அவசியம் வணிகர்கள் பின்பற்ற வேண்டும்,” என்றார்.

இந்நிலையில் தான், தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை வைக்காவிட்டால், 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், “புதிய சட்ட திருத்தப்படி, 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் வணிக நிறுவனங்கள், இணையதளத்தில் பதிவு செய்து பதிவு சான்று பெறுதல் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. மேலும், அனைத்து வணிக நிறுவனங்களும், தங்களது பெயர் பலகையை தமிழில் அமைப்பது கட்டாயம் ஆகும். அவ்வாறு அமைக்காத வணிக நிறுவன உரிமையாளர்களுக்கு, 2,000 ரூபாய் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.

இந்த சூழலில் தமிழில் பெயர் பலகை அமைக்க தமிழக அரசு வணிகர்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் புதிய சட்ட திருத்தங்கள் பற்றி அனைத்து வணிகர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் வணிகர்கள் கோரிக்கைகள் வைத்துள்ளனர்.