ஆர்.எஸ்.எஸ்.சுக்கு அனுமதி அளித்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்ககோரி கோவை கலெக்டரிடம் மனு..!

கோவை : கோவை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சமீரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியலமைப்பினர், விவசாயிகள், பொதுமக்கள் என தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.

இதில் நாம் தமிழர் கட்சி சார்பாக அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை மாநகராட்சியின் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பயிற்சி வகுப்பு நடத்தியுள்ளது. அரசு பள்ளியில் அரசியல் அமைப்புகளுக்கு, கட்சிகளுக்கு இது போன்ற நிகழ்வுகள் நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை அனுமதிக்கூடாது. அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பயிற்சி நடத்துவதற்கு மறைமுகமாக ஒத்துழைப்பு வழங்கிய பள்ளி நிர்வாகம் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் கோவையில் உள்ள எந்த ஒரு அரசு பள்ளிக்கூடத்திலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பயிற்சி வகுப்பு நடத்துவதற்கு அனுமதிக்க கூடாது என கூறப்பட்டிருந்தது.

மதுக்கரை பகுதி மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதி அருகே டாஸ்மாக் கடை திறக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் பகுதியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வாரச்சந்தை நடைபெறுகிறது. மேலும் அருகில் அரசு பொது மருத்துவமனை உள்ளது. பல்வேறு கல்லூரிகள், பள்ளிகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலையும் அருகில் உள்ளது. இங்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் விபத்துக்கள் அதிகளவில் ஏற்படும். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தொல்லையாகவும் இருக்கும். அதேபோல் வார சந்தை நடத்துவதற்கும் இடையூறாக இருக்கும். எனவே இப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க வேண்டாம். கலெக்டர் உடனடியாக டாஸ்மாக் கடை திறக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.