ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் பெரும் அரசியல் சர்ச்சையாக மாறியுள்ளது. புகாரை காவல்துறையின் பதிவு செய்யவில்லை என ஆளுநர் மாளிகை முன்வைத்த குற்றச்சாட்டை டிஜிபி மறுத்துள்ளார்.
மற்றொருபுறம் பெட்ரோல் குண்டு வீசியவருக்கு ஆதரவாக செயல்பட்டது யார் என்பது குறித்து திமுகவும், பாஜகவும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் நுழைவாயில் மீது நேற்று முன்தினம் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத்தை காவல்துறையினர் கைது செய்ததில் அவர் நீதிமன்ற காவலில் உள்ளார். இந்நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா மற்றும் துணை ஆணையர் பொன் கார்த்திக் ஆகியோர் ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை நேற்று ஆய்வு செய்தனர்.
பின்னர் ஆளுநரை நேரில் சந்தித்த காவல்துறை உயரதிகாரிகள் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக ஆளுநரிடம் விளக்கம் அளித்தனர்.
பின்னர் ஆளுநர் மாளிகை தரப்பில் ‘சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அளிக்கப்பட்ட புகாரில் ராஜ்பவன் மீதான தாக்குதல் குறித்த புகாரை காவல்துறையினர் பதிவு செய்யவில்லை’ என குற்றஞ்சாட்டி உள்ளது. மேலும் தன்னிலையாக பதிவு செய்யப்பட்ட புகார், தாக்குதலை சாதாரண நாசகார செயலாக நீர்த்துப்போகச் செய்துவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவசரகதியில் கைது மேற்கொள்ளப்பட்டு, குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டதால், பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக்கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளதாகவும், நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், “ஆளுநர் மாளிகை முன் வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வெடித்தது என்று சொல்வது உண்மைக்கு புறம்பானது.
பெட்ரோல் குண்டை எறிய முற்பட்டபோது பாதுகாப்பு பணியிலிருந்த தமிழக காவல்துறை காவலர்களால் தடுக்கப்பட்டது. இந்நிலையில் ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தால் எவ்வித சேதமோ, காயமோ ஏற்படவில்லை.
ஆனால் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாகவும், பெட்ரோல் குண்டு வீசியவர் ஆளுநர் மாளிகை வாயிற் காப்பாளர்களால் தடுக்கப்பட்டதாகவும், அங்கு வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வெடித்தது எனவும் ஆளுநர் மாளிகை தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில் கூறப்பட்டிருக்கிறது. அனைத்தும் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. மயிலாடுதுறை சென்றபோது ஆளுநரின் வாகனம் சென்றபின் கறுப்பு கொடி வீசிய புகாரில் 73 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மேற்படி சம்பவங்கள் அனைத்திற்கும் காணொளி பதிவுகள் உள்ளன. ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கட்டைகள் வீசப்பட்டன என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் முழுமையான விசாரணை நடத்தப்படும். ஏற்கனவே கண்காணிப்பு கேமரா பதிவுகள் முழுமையாக சேகரிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மற்றும் அவரது மாளிகைக்கு தமிழ்நாடு காவல்துறையினரால் உரிய பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது” என கூறியுள்ளார்.
கூடுதலாக, “ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது . இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்” என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே பாஜகவின் தனக்குத் தானே வெடிகுண்டுத் திட்டம் அம்பலமாகியுள்ளதாக திமுக ஐ.டி. விங் பக்கத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கருக்கா வினோத்தை முந்தைய வழக்கில் பிணையில் எடுத்தது திருவாரூர் மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்தமிழ் செல்வகுமார் எனவும் அந்த பதவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும் தனது சமூகவலைதளத்தில், “கருக்கா வினோத்தை பிணையில் எடுத்த வழக்கறிஞர் பாஜகவில் இருக்கிறார். பாஜக வழக்கறிஞரே குற்றவாளியை பிணையில் எடுத்துள்ளது வேறொரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பாஜகவை சேர்ந்தவராக குறிப்பிடப்பட்ட வழக்கறிஞர் முத்தமிழ் செல்வகுமார், தாம் எந்த கட்சியிலும் இல்லை என திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இதனிடையே அமைச்சர் ரகுபதி மற்றும் திமுக ஐ.டி. விங் குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு பாஜக தனது சமூகவலைதள பக்கத்தில் பதில் அளித்துள்ளது.
அதில், “பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி கைதான கருக்கா வினோத்தை திமுக நிர்வாகிகள் இசக்கி பாண்டி, நிசோக் ஆகியோர் பிணையில் எடுத்துள்ளனர். பாஜக வழக்கறிஞர் என்று பரப்பப்படும் முத்தமிழ் செல்வன் 2021ஆம் ஆண்டே கட்சியிலிருந்து விலகிவிட்டார்.
தமிழக பாஜக அலுவலகத்தை தாக்கிய ஒருவரை திமுகவினர் பிணையில் எடுத்துள்ளதன் மூலம் திமுகவினர் இதில் சம்பந்தப்பட்டுள்ளனரா என்ற சந்தேகத்தை வலுப்படுத்துவதாக இது அமைகிறது” என்று குறிப்பிட்டுள்ளது. தொடர்ச்சியான இக்குற்றச்சாடுகள், அடுத்தடுத்து பல சந்தேகங்களுக்கு வழிவகுத்துள்ளது.