இந்தியாவில் மூன்றாம் பாலினத்தவர்களின் உணர்வுகளை, அவர்களுக்கான வாழ்க்கை முறைகளை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர். ஒரு சிலர் ஏற்க மறுக்கின்றனர்.
மூன்றாம் பாலினத்தவரை மரியாதை குறைவாக நடத்தும் சம்பவங்களும் தொடர்ந்து கொண்டுதான், இருக்கிறது.
இந்திய சட்டப்படி அனைத்து உரிமைகளும் மூன்றாம் பாலினத்தவருக்கு இருந்தாலும், அதை பெறுவதில் அவர்களின் போராட்டம் “காணல் நீராகவே” இருக்கிறது.
மூன்றாம் பாலினத்தவர்களாக சிலர் மாறுவது இயல்பானதே, அது நோய் அல்ல என மருத்துவறை ஆய்வுகள் கூறுகின்றன.
மெல்ல, மெல்ல, மூன்றாம் பாலினத்தவர் மீதான கேலி,கிண்டல் மறைந்து “மலைத்து” பார்க்குமளவுக்கு பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர்.
கருத்தரித்த மூன்றாம் பாலினத்தம்பதி
கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் உம்மலத்தூர் பகுதியைச் சேர்ந்த சஹத்- ஜியா, இந்தியாவின் முதல் மூன்றாம் பாலின தம்பதிகளாக கருதப்படுகின்றனர். இவர்கள் இருவரும் மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் இருக்கின்றனர். காரணம் சஹத் எட்டு மாதம் கர்ப்பமாக இருக்கிறார்.
சஹத் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறியவர். அதேபோல ஜியா ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர்.
23 வயதான சஹத் ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்து வருகிறார். 21 வயதான ஜியா நடன ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர்களுக்கு கர்ப்பம் தரிப்பது சாத்தியமாகி இருக்கிறது
மூன்றாம் பாலினத்தவரால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது.குழந்தையை தத்தெடுக்க வேண்டுமென்றாலும், கடுமையான சட்ட நடவடிக்கைகள் இருப்பதை சஹத்தும், ஜியாவும் அனுவப்பூர்வமாக உணர்ந்திருந்தனர். தங்களால் குழந்தையை தத்தெடுக்க முடியாது. அதற்கு மாற்று வழி தேடியபோது சஹத் தயங்கியுள்ளார். தான் பெண்ணாக இருந்து ஆணாக மாறியதால், மீண்டும் பெண்ணாக முடியாது என முதலில் மறுத்துள்ளார்.
ஜியாவின் அன்பும், தாயாக வேண்டும் என்ற அவரது, தீவிர ஆசையும் சஹத்தின் மனதை கரைத்ததுள்ளது.
சஹத்திற்கு வேறு எந்தவொரு உடல்நிலை பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்ய கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அவருக்கு முதற்கட்ட பரிசோதனை நடத்தப்பட்டது.
அவருக்கு உடல்நிலையில் எந்த பிரச்சனையும் இல்லை என்பது உறுதியான பிறகு இதற்கு தேவையான சிகிச்சை தொடங்கப்பட்டது.
பாலின மாற்று அறுவை சிகிச்சையில் சஹத்தின் மார்பகங்கள் அகற்றப்பட்ட போதிலும், கருப்பை உள்ளிட்ட உறுப்புகள் இன்னும் அகற்றப்படாமல் இருந்தது.
மருத்துவ ரீதியாக சஹத்தால் குழந்தையை பெற்றெடுக்க முடியும் என்பதால் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். மருத்துவர்களின் ஆலோசனைப்படி, ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய ஜியா மூலம் சஹத் கருவுற்றார்.
சஹத் நம்மிடம் நெகிழ்ச்சியோடு பேசுகையில்
வாழ்நாள் முழுவதும் ஆணாக இருக்க ஆசைப்பட்டு, குழந்தைக்காக மீண்டும் பெண்ணாக மாற எடுத்த முடிவு தன்னை உணர்ச்சிபூர்வமாக பாதித்ததாக கூறினார்.
பிரசவத்திற்குப் பிறகு குழந்தையின் தந்தையாக இருப்பேன், என்ற நிபந்தனையுடன் சஹத் கர்ப்பமாக இருக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
நான் ஒரு தாயாகவும், தந்தையாகவும்” இருப்பது மிகவும் சுவாரஸ்யமானது. உணர்வுப்பூர்வமாக எடுத்துக்கொள்ள வேண்டியது நிறைய இருந்தாலும், ஒரு தாயாக இந்தக் கட்டத்தை முடித்துவிட்டு அப்பாவாக மாறும் வரை தன்னால் காத்திருக்க முடியாது என்றார்.
ஆரம்பத்தில் தனது தாயார் கர்ப்பத்தை கடுமையாக எதிர்த்ததாகவும், ஆனால் இப்போது பேரக்குழந்தையின் நினைப்பிலே அவர் சந்தோஷப்படுவதாக தெரிவித்தார்.
சமூகம்” எங்களை எப்படி நடத்தும், என என் அம்மா மிகவும் பயந்தாள். எங்கள் குடும்பத்தில் என் குழந்தைதான் முதல் குழந்தை. நான் தாயாகிறேன் என்று சிலிர்த்து என்னை மீண்டும் பெண்ணாக மாற்றினாள். ஆனால் நான் மிகத் தெளிவாகச் சொன்னேன். இறுதியாக, அம்மா நாங்கள் சொன்னதை ஏற்றுக்கொண்டார்.
மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாமல் வாழச் சொன்னார்,
தான் கருத்தரித்து எட்டு மாதங்களாகி விட்டது. இந்தியாவில் கருத்தரித்தல் மூலம் பெற்றெடுக்கும் முதல் முன்றாம் பாலினத்தம்பதி தாங்கள் தான் என்றார்.
வாழ்க்கையின் குறிக்கோள்”
என் வாழ்க்கை, என் விதிகள். அதுவே எங்கள் வாழ்க்கைக்கான குறிக்கோள், இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது, ”என்று உற்சாகமாக ஜியா நம்மிடம் பேசத்துவங்கினார்.
21 வயதான தான், கோழிக்கோட்டில் கிளாசிக்கல் நடன ஆசிரியையாக வேலை பார்த்து வருவதாக தெரிவித்தார்.
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும், தங்களின் மாறுதல் செயல்முறையின் ஒரு பகுதியாக ஹார்மோன் சிகிச்சைக்கு இருவரும் உட்பட்டுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
குழந்தை வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருந்ததாலே, சஹத்தின் மனதை மாற்றி, அவர் எட்டு மாத கரப்பிணியாக இருப்பதாக, மகிழ்ச்சி பொங்க பேசினார்.
ஆரம்பத்தில், தங்களது படங்களை சமூக வலைதளத்தில் பகிர பயந்ததாகவும், பின்னர் “எங்கள் குழந்தையை அனைவருடனும் கொண்டாட விரும்பியதால், நாங்கள் அதைப் பற்றி வெட்கப்பட வேண்டியதில்லை என்பதை உணர்ந்தோம்” . வரும் மார்ச் 4ஆம் தேதி பிரசவம் இருக்கும் என எதிர்பார்ப்பதாக ஜியா தெரிவித்தார்.
குழந்தை பிறந்த பிறகு, தாய் பால் வங்கியில் இருந்து தாய்ப்பாலை வாங்கி குழந்தைக்கு தரவும் இவர்கள் முடிவு செய்துள்ளனர்.
சஹத் கர்ப்பம் குறித்து, “சஹத் ஜியா ஜோடியின் போட்டோஷூட்” சமூக வலைதளங்களில் வைரலாகி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.