வெள்ளலூர் குப்பை கிடங்கில் பசுமை வனம் அமைக்க திட்டம் – கோவை மாநகராட்சி ஆணையர் தகவல்..!

கோவை மாநகராட்சி ஜெர்மன் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் இணைந்து நிலையான நகர்ப்புற வளர்ச்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகரில் திடக்கழிவு மேலாண்மை குறித்து நகர்ப்புற ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

மாநகராட்சி ஆணையர் கூறும்போது:-

கோவை மாநகராட்சி மற்றும் ஜெர்மன் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் இணைந்து நகர்ப்புற ஆய்வுகள் நடத்தப்பட்டு உள்ளது. கோவை மாவட்டம் தமிழ்நாட்டில் மிக முக்கிய வளர்ந்து வரும் மாவட்டங்களில் ஒன்றாகும். கோவையில் நகர்ப்புற கட்டமைப்பு வளர்ச்சி நன்றாக உள்ளது. இங்குள்ள முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக திடக்கழிவு மேலாண்மை உள்ளது. திடக்கழிவு அதிகளவில் தேங்குவதால் அவற்றை வெளியேற்றுவதில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. அதேபோல் குப்பைகளை தேக்கி வைக்க போதிய நிலங்கள் பற்றாக்குறை உள்ளது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தினசரி சேகரித்து வரும் குப்பைகளின் 1200 முதல் 1300 டன் வரை உள்ளது. இவற்றில் 500 முதல் 600 டன் வரையிலான குப்பைகள் மட்டுமே முறைப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
வெள்ளலூர் குப்பை கிடங்கில் 17 லட்சம் கியூபிக் மீட்டர் குப்பைகள் சேகரிக்கப்பட்டு உள்ளன. அவற்றில் 7 லட்சம் கியூபிக் மீட்டர் குப்பைகள் முறையாக அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது. வெள்ளலூர் குப்பை கிடங்கில் குப்பைகள் இல்லாத நிலையை எட்ட 3 மாதங்களில் பயோ ஃபாரஸ்ட் என்ற பசுமை வனம் அமைக்க திட்டமிட்டு உள்ளோம். அதே போல் சி.என்.ஜி கொண்டு எம்.ஆர்.எப் பிளான்ட் ஆகிய திட்டங்களுக்கு அரசின் ஒப்புதலுக்காக அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. கோவை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மையில் பொதுமக்களின் பெறப்படும் குப்பைகள் 80 சதவீதம் முறைப்படுத்தப்பட்டு உள்ளது. குப்பைகள் சேகரிக்கும் வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டு அவற்றை செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்களில் செல்போன் செயலி மூலம் மக்கும் குப்பை எடை போன்றவற்றினை டிஜிட்டல் முறையில் கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்..