கடந்த 3 தினங்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 200 ஆண்டுகளாக பெய்யாதா கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல ஏரிகள், குளங்கள் நிரம்பி உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்து வெள்ளக்காடாக மாறி வருகிறது. பெரும்பாலான வீடுகளில் தண்ணீர் புகுந்து உடைமைகளையும் பொருட்களையும் வீணடித்து விட்டது. ஏராளமான கால்நடைகள், வாகனங்களை வெள்ளம் அடித்து சென்று விட்டது. இதுவரை தென்ன்மாவட்ட வரலாற்றில் பதிவு செய்யப்படாத அளவிற்கு மழை கொட்டி தீர்த்து வருகிறது. ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு தீவாக காட்சியளிப்பதோடு எங்கும் போய்வர முடியாத அளவிற்கு துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கனமழை மற்றும் கடும் வெள்ளம் காரணமாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் நிலவும் தீவிர சூழ்நிலையை கருத்தில் கொண்டு, 21.12.2023 (வியாழக்கிழமை) அன்று நடைபெறவிருந்த “அட்வென்ட் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை” ரத்து செய்ய தமிழ்நாடு ஆளுநர் மாளிகை முடிவு செய்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.