சென்னை: மக்களவைத் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் ஏற்பட்டவெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து நிவாரண நிதி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் அளவில் விசிகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, வள்ளுவர் கோட்டம்அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சித்தலைவர் திருமாவளவன் தலைமை வகித்தார். உடன்கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் பேசியதாவது: விசிக தலைவர் திருமாவளவன்: தமிழகத்தில் பாஜக ஆட்சியில்இல்லை என்பதால் அலட்சியப்படுத்துவதை ஏற்க முடியாது. பேரிடராக அறிவிக்க முடியாது என்று கூறும் அதிகாரத்தை நிர்மலா சீதாராமனுக்கு வழங்கியது யார்?மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மாற்றங்களைச் செய்ய முடியும். எனவேதான் வளர்ந்த நாடுகளில் கூட வாக்குச்சீட்டு முறையைபின்பற்றுகின்றனர். தமிழகத்தில் கூட கடந்த தேர்தலில் சில மையங்களில் வாக்குப் பதிவு, வாக்குகணக்கு இடையே ஒத்துப்போக வில்லை. எனவே, 100 சதவீதம் விவிபேட் இயந்திரத்தைப் பயன் படுத்த வேண்டும். தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் ஆ.கோபண்ணா: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது. பேரிடருக்கு நிதி வழங்காமல் இருந்துவிட்டு, மற்ற மாநிலங்களை விடத் தமிழகத்துக்கு அதிக நிதி வழங்குவதாகப் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: குடியுரிமை மசோதா அறிவிப்பை வெளியிட்டு, மதக்கலவரத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். அனைத்துகட்சிகளும் ஒன்றுசேர்ந்து போராட்டத்தை அறிவிக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன்: இதுவரை வெள்ள பாதிப்புக்கென தமிழகத்துக்கு ஒருபைசா கூடமத்திய அரசு கொடுக்கவில்லை. வாக்குச்சீட்டு முறையைமீண்டும் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், பனையூர் மு.பாபு எம்எல்ஏ, அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், விசிக தலைமை நிலையச் செயலாளர் அ.பாலசிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.