மரணம் அடைந்த விஜயகாந்த்துக்கு அரசின் சார்பில் அத்தனை ஏற்பாடுகளையும் செய்து மிகச் சிறப்பான மரியாதையுடன் வலிய அனுப்பி வைத்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினரிடமும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன தேமுதிக நிறுவனத்தலைவரும்நடிகருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று காலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் வைக்கப்பட்டு பின்னர் தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் அஞ்சலிக்காக விஜயகாந்தின் உடல் தீவுத்திடலில் வைக்கப்பட்டது. அங்கு திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொண்டர்கள், ரசிகர்கள் என பலரும் மதியம் 2.30 மணிவரை அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து விஜயகாந்த் உடல் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு தேமுதிக அலுவலகம் நோக்கி இறுதி ஊர்வலமாக வந்தடைந்தது விஜயகாந்த் உடல். வழிநெடுகிலும் தொண்டர்கள், பொதுமக்கள் கண்ணீர் மல்க, மலர்களைத் தூவி அஞ்சலி செலுத்தினர். பிறகு தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்ட விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். 72 குண்டுகள் முழங்க கேப்டனின் உடலுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. முதலமைச்சர், முன்னாள் இந்நாள் அமைச்சர்கள், முன்னணி அரசியல் தலைவர்கள் தேமுதிக தொண்டர்கள், விஜயகாந்தின் ரசிகர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீருடன் விஜயகாந்த்துக்கு பிரியாவிடை கொடுத்துள்ளனர். விஜயகாந்த்துக்கு உச்சபட்ச மரியாதை அளிக்கப்பட்டதன் மூலமும், நல்லடக்க நிகழ்வில் கலந்து கொண்டதன் மூலமும் மக்களின் இதயங்களை வென்றுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
விஜயகாந்த் மறைந்தது முதல், அவரது நல்லடக்கம் சீரிய வகையில் நடத்தப்பட்டது வரை, முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் தமிழக அரசு தரப்பில் இருந்து பல வகைகளிலும் விஜயகாந்த் குடும்பத்தினருக்கு ஒத்துழைப்பும், உதவியும் வழங்கப்பட்டன.
விஜயகாந்த்தின் நல்லடக்கம் முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என அறிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், விஜயகாந்தின் இறுதி ஊர்வலம், தீவுத்திடலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட ஏற்பாடுகள், மலர் அலங்காரங்கள் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் தமிழக அரசு ஏற்றுக்கொண்டு, சிறப்பான முறையில் செய்தது. அரசு மரியாதை என்றால், செலவுகளை அரசு ஏற்பது வழக்கமான நடைமுறை என்றாலும், மிகப்பெரிய அளவில் தீவுத் திடல் முதல் கோயம்பேடு வரை ஊர்வலம் நடத்தியது முதல்வரின் தனி அன்பால் தான் என்கிறார்கள். விஜயகாந்தின் உடல் மியாட் மருத்துவமனையிலிருந்து அவருடைய சாலிகிராமம் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டதும், முதல் ஆளாகச் சென்று மரியாதை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின். அப்போது, பிரேமலதா மற்றும் எல்.கே.சுதீஷின் கைகளைப் பற்றி ஆறுதல் சொன்ன முதல்வர் ஸ்டாலின், எந்த உதவி என்றாலும் தயங்காமல் கேளுங்கள், உரிய மரியாதையுடன் கேப்டன் வழியனுப்பப்படுவார் என உறுதி அளித்துள்ளார். தொடர்ந்து, முதல்வர் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பிரேமலதா குடும்பத்தினரிடம் பேசி, என்னென்ன உதவிகள் வேண்டுமோ அனைத்தையும் செய்து கொடுத்து வந்தனர். விஜயகாந்த் குடும்பத்தினரின் விருப்பப்படி, அவரது உடலை கோயம்பேடு தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்ல தீர்மானித்ததுமே, அதற்கான ஏற்பாடுகள் அரசு தரப்பில் இருந்து உடனடியாக தொடங்கின.
மேலும், வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டையொட்டி நேற்று சென்னையில் பிரமாண்டமான விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் பங்கேற்றிருந்த நிலையில், அந்த கொண்டாட்ட நிகழ்வினையே ரத்து செய்து, பெரியார் திடலில் மிகவும் எளிமையான முறையில் விழா நடந்தது. விஜயகாந்த் மறைவையொட்டி, அந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றவே இல்லை. மேலும், கோயம்பேடு தேமுதிக அலுவலகத்திற்கு விஜயகாந்த் உடல் வந்ததுமே, அப்பகுதியில் மக்கள் குவியத் தொடங்கியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாலையில் இன்னும் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கி, போலீசாரால் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவே முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த முதல்வர் ஸ்டாலின், பொது இடத்தில் விஜயகாந்த் அஞ்சலிக்கு ஏற்பாடு செய்வது பற்றி அதிகாரிகளிடமும், அமைச்சர்களிடமும் ஆலோசித்துள்ளார். உடனடியாக, அரசு தரப்பில் இருந்து, பிரேமலதாவிடம் பேசப்பட்டது. வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வருவார்கள் என்பதால், அஞ்சலி செலுத்துவதற்காக, விஜயகாந்த் உடலை தீவுத் திடலில் வைக்கலாம் என யோசனை வழங்கப்பட்டது. இதையடுத்து, பிரேமலதா தனது குடும்பத்தினருடன் ஆலோசித்து, அதற்கு ஒப்புதல் அளிக்க, உடனடியாக, தீவுத் திடலில் ஏற்பாடுகள் தொடங்கின. அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பணிகளை முடுக்கி விட்டனர். மேலும், அதிகாலையில், விஜயகாந்த் உடலை வாகனம் மூலம் தீவுத் திடலுக்கு கொண்டு செல்லும் பணிகள் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டன. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினே களத்தில் இறங்கி, இறுதி ஊர்வலம் செல்லும் வழித்தடத்தையும் தீவுத்திடலில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்ட இடத்தையும் ஆய்வு செய்தார். தீவுத் திடலில் குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்து உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
விஜயகாந்த் உடல் நல்லடக்கம் எந்தவித தடங்கலும் இன்றி நடந்தேற வேண்டும். அவரது குடும்பத்தினருக்கோ, தொண்டர்களுக்கோ, பொதுமக்களுக்கோ எந்த வித சிரமமும் ஏற்படக் கூடாது என்ற முதல்வர் ஸ்டாலினின் கண்டிப்பான உத்தரவால் காவல்துறை தொடங்கி, அனைத்து தரப்பினரும் பார்த்துப் பார்த்துச் செய்தனர். விஜயகாந்த் இறுதிச்சடங்கில் குடும்ப உறுப்பினர்கள், விஐபிகள் என 200 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இறுதிச்சடங்கில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்பதால் பொதுமக்களுக்கு எல்இடி திரை ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் மூலம், இறுதிச் சடங்கு காட்சிகளை பொதுமக்கள் கண்டனர். இந்த ஏற்பாடுகளையும், தமிழக அரசே மேற்கொண்டது. விஜயகாந்த்தின் இறுதிச் சடங்கில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்க உள்ளதாகத்தான் முன்பு தகவல்கள் வெளியாகின.
ஆனால், விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலம், மக்கள் வெள்ளத்திற்கிடையே மிதந்து வந்த காட்சியை தொலைக்காட்சிகளின் வாயிலாக கண்ட முதல்வர் ஸ்டாலின், தானும் இறுதியாக விஜயகாந்த்தை நேரில் பார்த்து விடை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அங்கு செல்லத் தீர்மானித்தாராம். மறைந்த கேப்டன் விஜயகாந்த், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மீது மிகுந்த அன்பு கொண்டவர், அவரது திருமணமே கருணாநிதி தலைமையில் தான் நடந்தது என்றாலும், தேமுதிக தொடங்கப்பட்டது முதலே, அக்கட்சி திமுகவுக்கு எதிராகவே செயல்பட்டு வந்திருக்கிறது. 2005 முதல் இத்தனை ஆண்டு காலத்தில், அதிமுக, பாஜக, அமமுக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக என பல கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள, தேமுதிக திமுகவுடன் இணையவே இல்லை. ஒருமுறை திமுகவை பின்னுக்குத் தள்ளி எதிர்க்கட்சி அந்தஸ்தையும் பெற்றது தேமுதிக. கடைசியாக ஒருமுறை கேப்டன் முகத்தை பார்க்க! நேராக விஜயகாந்த் முன் நின்று விடைகொடுத்த முதல்வர் ஸ்டாலின் அப்படி இருந்தும், விஜயகாந்த் மீது வைத்துள்ள அன்பினால், முதல்வர் ஸ்டாலின், அவருக்கு மிகச்சிறந்த மரியாதையை அரசு சார்பில் அளித்து பிரியாவிடை கொடுத்திருக்கிறார். கருணாநிதி மறைந்தபோது கண்ணீருடன் பேசிய விஜயகாந்த்தை நினைவுகூர்ந்து, இதுவரையிலான விருப்பு வெறுப்புகளை எல்லாம் ஒதுக்கி வைத்து, மிகச்சிறப்பான மரியாதையை அளித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தேமுதிக கட்சி அலுவலகத்திலேயே விஜயகாந்தின் உடலை அடக்கம் செய்ய பிரேமலதா குடும்பத்தினர் முடிவு செய்ததுமே, அதற்கு அனுமதி அளிக்கும் தீர்மானத்தை சென்னை மாமன்றத்தில் கொண்டுவரச் செய்தார் ஸ்டாலின். தமிழக அரசு தரப்பில் விஜயகாந்த் குடும்பத்துக்குத் தேவையான அத்தனை உதவிகளும் கேட்காமலேயே அளிக்கப்பட்டன. இதைவிட சிறப்பான மரியாதையை யாரும் தந்துவிட முடியாது என்ற அளவுக்கு முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகள் இருந்ததாக பொதுமக்கள் பலருமே தெரிவித்துள்ளனர்.