சென்னை: பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 50,674 பேர் தமிழ் தேர்வு எழுத வராதது சமூகத்திற்கு மிகப் பெரும் பேரிழப்பு என கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கவலையும், ஆதங்கமும் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் உயர்கல்வி விழுக்காடு குறையும் எனக் கூறியுள்ள அவர் இந்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் முதல் மாவட்ட கல்வி அதிகாரிகள் வரை அனைவருக்கும் பொறுப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதேபோல் இது தொடர்பாக கருத்துக் கூறியுள்ள மற்றொரு கல்வியாளரான நெடுஞ்செழியன், குடும்ப வறுமையும், தோல்வி அச்சமும் தேர்வெழுத வர விடாமல் தடுத்திருக்கலாம் எனக் கூறுகிறார்.
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த 13ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் தொடங்கியது. இந்த தேர்வை லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் எழுதும் நிலையில் 50,674 பேர் முதல் பரீட்சையான தமிழ் பரீட்சையை எழுத வரவில்லை. கடந்தாண்டு தமிழ் தேர்வை 32,000 பேர் எழுத வராத நிலையில் இந்தாண்டு அதன் எண்ணிக்கை கூடுதலாக உயர்ந்திருப்பது பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளை மட்டுமல்ல தமிழ் ஆர்வலர்கள் உட்பட பல்வேறு தரப்பினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இதனிடையே இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பது பற்றி அறிய கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவிடம் பேசினோம். அப்போது அவர் கூறுகையில், ”50,000 மாணவர்கள் தேர்வெழுத வரவில்லை என சும்மா மொட்டையாக அரசு தேர்வுகள் இயக்குநரகம் கூறக்கூடாது. தேர்வெழுத வராதவர்களில் எத்தனை பேர் மாணவர்கள், எத்தனை பேர் மாணவிகள், எந்த மாவட்டங்களில் எவ்வளவு பேர் ஆப்செண்ட், தனியார் பள்ளிகளில் எத்தனை பேர், அரசுப் பள்ளிகளில் எத்தனை பேர் என்ற முழு விவரத்தையும் வெளியிட வேண்டும்.”
‘மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத வராததற்கு குறிப்பிட்ட ஒருவர் மீது பழியை சுமத்தக் கூடாது. இந்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் முதல் மாவட்ட கல்வி அதிகாரிகள் வரை பொறுப்பு இருக்கிறது. நீட் தேர்வு வந்தது முதல் மேல்நிலை வகுப்புகளில் பயாலஜி பிரிவை தேர்வு செய்வதை பெரும்பாலானோர் தவிர்க்க ஆரம்பித்துவிட்டனர். மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத வரவில்லை என்பதை வெறுமனே ஆப்செண்டாக மட்டும் பார்க்கக் கூடாது. இதனை சமூகத்தின் பேரிழப்பாக கருத வேண்டும். ஆம், தேர்வு எழுதவே இத்தனை பேர் வரவில்லை என்றால் உயர்கல்வி விழுக்காடு குறையும். சமூகத்தின் வளர்ச்சிக்கு பயன்பட வேண்டிய அறிவு பயன்பட முடியாமல் போகிறது.
‘இதனால் இந்த விவகாரத்தை பள்ளிக்கல்வித்துறை மிக சீரியஸாக எடுத்துக்கொண்டு ஆராய வேண்டும்” எனக் கூறினார் பிரின்ஸ் கஜேந்திர பாபு.இதேபோல் இது தொடர்பாக கருத்துக் கூறியுள்ள மற்றொரு கல்வியாளரான நெடுஞ்செழியன், குடும்ப வறுமையும், தோல்வி அச்சமும் தேர்வெழுத வர விடாமல் தடுத்திருக்கலாம் எனக் கூறுகிறார்.