பிரதமர் மோடி இதயத்தால் தமிழர்: யாத்திரை விழாவில் அண்ணாமலை பேச்சு
பிரதமர் இதயத்தால் தமிழர். தமிழ்நாட்டை மாற்றும் சக்தி இந்த யாத்திரைக்கு உள்ளது என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையின் ”என் மண், என் மக்கள்” என்ற கோஷத்துடன் 168 நாளில் 1,700 கி.மீ. தூர பாதயாத்திரை துவக்க விழா இன்று ராமேஸ்வரத்தில் துவங்கியது. ஆர்.பி. உதயகுமார், ஜி.கே. வாசன், கிருஷ்ணசாமி, ஏ.சி. சண்முகம், உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பேசும் போது :-
இந்த புண்ணிய பூமியான ராமேஸ்வரத்திற்கு நாம் அனைவரும் ஆண்டவன் சாட்சியாக வந்து உள்ளோம். காரணம் தமிழகத்தில் தி.மு.க, ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.
2024 தேர்தலில் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராக அமர வேண்டும் என்பதும் நமக்கு தெரியும். இதற்கு ஆதரவாக தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டு உளளனர். மிக நீண்ட இரவு விலகுவது போன்று தோன்றுகிறது. பிரதமர் சாமானியர் இந்தியாவில் நடப்பது சாமானியனின் ஆட்சி. பிரதமர் மோடி இதயத்தால் தமிழர். அனைத்து நாடுகளும் இந்தியாவின் வளர்ச்சியை பெருமிதத்துடன் பார்க்கின்றன. 2024 ல் மோடி அவர்கள் மீண்டும் பிரதமராக வர நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.
மோடி அளவிற்கு எந்த பிரதமரும் தமிழை இந்த அளவிற்கு உயர்த்தி பிடித்ததில்லை. தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் திருக்குறளை பிரபலப்படுத்த வில்லை. மோடியின் ஆட்சியில் அனைத்து குடும்பங்களும் பயன் அடைந்து உள்ளது. திட்டங்கள் மூலம் அனைத்து வீடுகளிலும் மோடி உள்ளார். தமிழ்நாட்டை மாற்றும் சக்தி இந்த யாத்திரைக்கு உள்ளது. பயனடைந்த ஒவ்வொருவரின் முகவரின் தான் பிரதமரின் முகவரி .
நிரந்தர பிரதமரை கொண்டது தேசிய ஜனநாயக கூட்டணி இந்தியா கூட்டணியில் நாளுக்கு ஒருவர் பிரதமராக இருப்பர் ராகுல் சனி , ஞாயிறு கிழமைகளில் பிரதமராக இருப்பார் .
இந்த விழாவில் கலந்து கொண்டுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களும், தொண்டர்களும், நம்முடைய யாத்திரையாக கருத வேண்டும். இங்கு பேச மத்திய அமைச்சர் அமித்ஷா வந்து உள்ளார். அவர் அதிக நேரம் பேச வேண்டும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.