பொம்மன் -பெள்ளி தம்பதியை நேரில் சந்திக்க வருகிறார் பிரதமர் மோடி..!

நீலகிரி: ஆஸ்கர் விருது பெற்ற ‘தி எலிபேண்ட் விஸ்பெரர்ஸ்’ ஆவணப்படத்தில் நடித்த பொம்மன் -பெள்ளி தம்பதியை சந்திக்க பிரதமர் மோடி நாளை மறுதினம் நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு செல்கிறார்.

பிரதமர் மோடி சந்திக்க வருவதன் எதிரொலியாக யானைப் பாகர்களான பொம்மன் -பெள்ளி தம்பதிக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே பொம்மன் -பெள்ளியை சந்திக்க வருபவர்களை பரிசோதனை செய்த பிறகே காவல்துறையினர் அனுமதிக்கிறார்கள்.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் பொம்மன் பெள்ளி தம்பதியினரின் வீட்டை, பாதுகாப்பு அம்சங்கள் கருதி காவல்துறையினர் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டனர்.

சென்னையில் நாளை பிற்பகல் முதல் இரவு வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, நாளை இரவு மைசூர் செல்கிறார். அங்கு இரவு ஓய்வெடுக்கும் அவர் நாளை மறுதினம் நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு செல்கிறார்.

பிரதமர் வருகையை ஒட்டி தெப்பக்காடு பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதேபோல் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தெப்பக்காடு யானைகள் முகாம் பகுதியில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முதுமலையை பொறுத்தவரை அடர்ந்த வனப்பகுதி என்பதால் அதிவிரைவுப்படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி வருகையை ஒட்டி நேற்று முதல் வரும் 9ஆம் தேதி வரை முதுமலை புலிகள் காப்பகம் மூடப்படுவதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி நினைத்திருந்தால் ஆஸ்கர் விருது பெற்ற பொம்மன் -பெள்ளி தம்பதியை டெல்லியில் உள்ள தனது அலுவலகத்திற்கே அழைத்து சந்தித்து பேசியிருக்கலாம். ஆனால் அவரோ அந்த தம்பதியின் இருப்பிடம் தேடி வந்து சந்தித்து அவர்களை பெருமைப்படுத்தவுள்ளார்.

இதன் மூலம் பழங்குடியின சமுதாய மக்கள் மத்தியில் கவனம் ஈர்க்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.