மீண்டும் ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி..?

ந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஒருமுறை ரஷ்யாவுக்குச் செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு அக்டோபரில் ரஷ்யாவின் கசானில் நடைபெற்ற 16வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்றார்.

இந்த நிலையில் மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் நடைபெற உள்ள ‘மாபெரும் தேசபக்தி போரின்’ 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் அணிவகுப்பில் பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ரஷ்ய செய்தி நிறுவனமான TASS தெரிவித்துள்ளது. ‘பெரும் தேசபக்தி போரின்’ 80வது ஆண்டு விழா மே 9 நடைபெற உள்ளதாகவும். இந்த நிகழ்வில் மோடி கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றும் அது தெரிவித்துள்ளது.

இந்திய ராணுவமும் இந்த அணிவகுப்பில் பங்கேற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வெளியுறவு அமைச்சகம் இது குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

பல்வேறு நாடுகளின் தலைவர்கள் அணிவகுப்புக்கு அழைக்கப்படுவதாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார்.

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா உட்பட பல நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்த சூழலில் மோடியின் மாஸ்கோ வருகை குறித்த செய்தி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.