செம்மொழி அந்தஸ்து பெற்ற பாலி மொழி – பிரதமர் மோடி பெருமிதம்..!

புதுடெல்லி: பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்துள்ளதாகவும், புத்தரின் மகத்தான பாரம்பரியத்தை உலகுக்கு எடுத்துரைக்க உதவும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

புத்தரின் போதனைகளை கொண்டாடும் சர்வதேச அபிதம்மம் திவஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியதாவது:- பழமையான பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியுள்ளது.

இது புத்தரின் மகத்தான பாரம்பரியத்தை உலகிற்கு காட்ட உதவும்.அதே சமயம், சுதந்திரத்துக்குப் பிறகு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, இந்தியாவின் கலாசாரப் பாரம்பரியத்தை மதிக்காமல் புறக்கணித்தது என்பதையும் நாம் அறிய வேண்டும்.

இன்றைய புவிசார் அரசியல் சூழலில் புத்தரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம்.அதன்படி, அனைத்து நாடுகளும் போரைத் தவிர்த்து அமைதிக்கான பாதையை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு நாடும் அதன் அடையாளத்துடன் தொடர்புடைய அதன் பாரம்பரியத்தை பெருமைப்படுத்தினாலும், இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது.

சுதந்திரத்திற்கு முன் இந்தியா மீது படையெடுத்தவர்கள் நமது அடையாளத்தை அழிக்க முயன்றதே இதற்குக் காரணம்.பின் வந்த ஆட்சியாளர்கள் (காங்கிரஸ்) அடிமை மனப்பான்மையால் பாதிக்கப்பட்டு அந்த முறையைப் பின்பற்றினர்.

இப்போது அந்த நிலை மாறிவிட்டது. நாடு இப்போது தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபட்டு சுயமரியாதையுடனும், தன்னம்பிக்கையுடனும் முன்னேறி வருகிறது.இந்த மாற்றத்தால் தான் அரசு துணிச்சலான முடிவுகளை எடுக்கிறது.

அதன் ஒரு பகுதிதான் பாலிக்கு செம்மொழி அந்தஸ்தை வழங்கியது.எனது அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் புத்தபெருமானின் போதனைகளால் வழிநடத்தப்படுகின்றன.

அதேபோல், நிலையற்ற தன்மை மற்றும் பாதுகாப்பின்மையால் பீடிக்கப்பட்ட உலகம், புத்தரின் போதனைகளிலிருந்து தனது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். புத்தரின் கூற்றுப்படி, சண்டைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் அமைதிக்கு வழிவகுக்காது.

அமைதியை விட பெரிய இன்பம் இல்லை என்பதை உலகம் புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.