யுஏபிஏ சட்டத்தில் கைது செய்யப்பட்டவரிடம் போலீஸாா் விசாரணை

யு.ஏ.பி.ஏ சட்டத்தில் கைது செய்யப்பட்டவரிடம் போலீஸாா் விசாரணை

ஈரோடு மாவட்டம், மணியக்காரன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஆசீப் முஸ்தகீன். இவா் ஹிந்து தலைவா்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக யுஏபிஏ சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளாா்.

இந்நிலையில், கோவை மத்திய சிறையில் சிறைத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு டிசம்பா் 15 – ஆம் தேதி சோதனை நடத்தினா். அப்போது, ஆசீப் முஸ்தகீன் ஒரு காகிதத்தில் ஐ.எஸ் அமைப்பின் கொடியை வரைந்து சிறையில் பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் ரேஸ்கோா்ஸ் போலீஸாா், ஆசீப் முஸ்தகீன் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இந்நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதிக்கக் கோரி கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.

மனுவை விசாரித்த முதன்மை நீதிபதி விஜயா, ஆசீப் முஸ்தகீனை 3 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த உத்தரவிட்டாா். இதையடுத்து, அவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.