கூடலூர் காவல் நிலையத்திற்கு வந்த புது விருந்தாளி… அலறி அடித்து ஓடிய காவலர்கள்.!!

கூடலூர்: கூடலூர் அருகே காவல் நிலையத்திற்குள் புகுந்த சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கூடலூரை அடுத்த நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட நடுவட்டம் பஜார் பகுதியை ஒட்டி நடுவட்டம் காவல் நிலையம் அமைந்துள்ளது.

கூடலூர் ஊட்டி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்தக் காவல் நிலையத்திற்குள் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. உள்ளே புகுந்த சிறுத்தை ஒவ்வொரு அறையாக சென்று வரும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. சிறுத்தை உள்ளே புகுந்ததால் அங்கு இருந்த காவலர்கள் அலறி அடித்து வெளியேறி உள்ளனர்.

சிறிது நேரம் கழித்து சிறுத்தை அங்கிருந்து வெளியேறி சென்றுள்ளது. மக்கள் நடமாட்டம் உள்ள நேரத்தில் சிறுத்தை காவல் நிலையத்தில் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறுத்தை காவல் நிலையத்திற்குள் வந்த சிசிடிவி கேமரா காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் நாய்களை வேட்டையாட வந்த சிறுத்தை கதவுகள் திறந்து கிடந்த காவல் நிலையத்திற்குள் புகுந்து இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.