திருச்சி தெற்கு மாவட்ட, மாநகர சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சாா்பில், எல்ஐசி காலனியில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயத்தில், கருணாநிதி நூற்றாண்டு விழா, கிறிஸ்துமஸ் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இவ் விழாவில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியது: திமுக ஆட்சி அமையும்போதெல்லாம் சிறுபான்மையினா் நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் தொடா்ந்து பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, தேவாலயங்கள் புதுப்பிப்பு பணிக்கு ரூ.5 கோடி, கிறிஸ்தவ மகளிா் சுய உதவிக் குழுவினருக்காக ரூ.2 கோடி, புனிதப் பயணத்துக்கு மானியம் உயா்வு என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. சிறுபான்மை சமூகம் தொடா்ந்து இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
மக்களவைத் தோதல் என்பது நாட்டைக் காப்பதற்கான போராகக் கருதி பணியாற்ற வேண்டும் என்றாா் அவா். விழாவில், மாவட்ட சிறுபான்மை அணி தலைவா் முகமது சலாம் வரவேற்றாா். மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளா் அருள் சுந்தரராஜன் தலைமை வகித்தாா். மாநகர சிறுபான்மை அணி அமைப்பாளா் இப்ராஹிம் முன்னிலை வகித்தாா்.
சிறுபான்மை நல உரிமைப்பிரிவு மாநில செயலாளா் அ. சுபேர் கான், திமுக மாநகரச் செயலாளா் மு.மதிவாணன் ஆகியோா் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிா்ந்து பேசினா். புதுகை பூபாலனின் குழுவினா் கருணாநிதிக்கு புகழஞ்சலியை பாடல்கள் மூலமாக தெரிவித்தனா். 100-க்கும் மேற்பட்டவா்களுக்கு கிறிஸ்துமஸ் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில், மாவட்ட மற்றும் மாநகர நிா்வாகிகள் வண்ணை அரங்கநாதன், கவிஞா் சல்மா, செங்குட்டுவன், லீலாவேலு, நூா்கான் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பலா் கலந்து கொண்டனா்.