செல்போன் பேசியபடி கார் ஓட்டிய பிரபல யூடியூபர் TTF வாசன் கைது..!

பிரபல யூடியூபர், பைக் ரேஸருமான டிடிஎப் வாசன் காஞ்சிபுரம் பகுதியில் விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற போது, விபத்து ஏற்பட்டது.

இதுதொடர்பான வழக்கில் அவரது ஓட்டுனர் உரிமம் 10 ஆண்டுகள் ரத்து செய்யப்பட்டது. மேலும் பைக் ஓட்டுவதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி பகுதிக்கு காரில் வந்த அவர், காரை அஜாக்கிரதையாகவும் கவனக் குறைவாகவும் பொது மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக செல்போனில் பேசிக் கொண்டே ஓட்டியதை கேமராவில் பதிவு செய்து Tniw Throttl ers என்ற ID ல் YOUTUBE சேனலில் பதவிட்டுள்ளார்.இதனை மதுரை மாநகர ஆயுதப்படை சார்பு ஆய்வாளரும், சமூக ஊடக கண்காணிப்பு காவலருமான மணிபாரதி என்பவர் அளித்த புகாரின் கீழ் அண்ணாநகர் காவல்துறையினர், டிடிஎப் வாசன் மீது செல்போனில் பேசியபடி வாகனத்தை இயக்குதல், அஜாக்கிரதையாக காரை இயக்குதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், கவனக்குறைவாக காரை இயக்குதல், அதிவேகமாக இயக்குதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை சென்னையில் கைது செய்து மதுரைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஏற்கனவே பைக் ஓட்டுவதற்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், காரில் பேசியபடி ஆபத்தை விளைவிக்கும் வகையில் காரை இயக்கியதாக டிடிஎப்.வாசன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மதுரை அண்ணாநகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.