தமிழ்நாடு அமைச்சரவை மாற்றப்படவிருப்பதாகக் கடந்த சில வாரங்களாகவே பேச்சுக்கள் அடிபட்டன. அதுவும் நிதியமைச்சராக பழனிவேல் தியாகராஜன் பேசியது போன்ற ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியான பிறகு எழுந்த இந்த பேச்சில், நிதித்துறை உள்ளிட்ட பல இலாகாக்கள் மாற்றப்படப்போவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவின் மகனும், மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ-வுமான டி.ஆர்.பி.ராஜா புதிதாக அமைச்சரவையில் இடம்பெறப்போவதாகவும் செய்திகள் உலாவின.
ஆனால் இதுபற்றி மூத்த அமைச்சர் துரைமுருகன் உட்பட தி.மு.க தரப்பில் பலரும் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவந்த நிலையில், இரண்டு நாள்களுக்கு முன்பு அமைச்சரவையில் புதிதாக ஒருவரைச் சேர்ப்பதற்கும், அமைச்சர் ஒருவரை வெளியேற்றுவதற்கும் ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாக அதிகாரப்பூர்வ செய்தி வெளியானது.
இது குறித்து ஆளுநரின் முதன்மைச் செயலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பால்வளத்துறை அமைச்சர் நாசரை அமைச்சரவையிலிருந்து நீக்கிவிட்டு, டி.ஆர்.பி.ராஜாவை அமைச்சரவையில் சேர்க்க முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்ததாகவும், ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளித்ததாகவும் கூறப்பட்டிருந்தது. அதன்படி ராஜ்பவனில் இன்று காலை 10:30 மணியளவில் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராகப் பதவியேற்றார்.
அதன் தொடர்ச்சியாக எந்தெந்த அமைச்சர்களுக்கு என்னென்ன இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது என்பது குறித்த பட்டியலும் தற்போது வெளியாகியிருக்கிறது. அதன்படி அமைச்சர் தங்கம் தென்னரசு வசம் இருந்த தொழில்வளத்துறை, புதிதாக பதவியேற்ற அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. மனோ தங்கராஜ் வசம் இருந்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. நாசர் கவனித்துவந்த பால்வளத்துறை மனோ தங்கராஜூக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.