குடியரசுத் தலைவா் திரௌபதி முர்மு இன்று முதுமலை வருகை… ஆஸ்கார் புகழ் பொம்மன், பெள்ளி தம்பதியை சந்திக்கிறார்.!!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 4 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார்.

திரவுபதி முர்மு இன்று காலை 11.30 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, கர்நாடக மாநிலம் மைசூரு வருகிறார்.

அங்கிருந்து தனி ஹெலிகாப்டரில் முதுமலை அடுத்த மசினகுடிக்கு வரும் அவா், பின்னர் சாலை வழியாக தெப்பக்காட்டில் உள்ள வளா்ப்பு யானைகள் முகாமுக்குச் செல்கிறார்.

முகாமில், ஆஸ்கா் விருது பெற்ற ‘தி எலிஃபண்ட் விஸ்பரா்ஸ்’ குறும்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியைச் சந்திக்கிறார்.

மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்படும் முர்மு, மீண்டும் காரில் மசினகுடி வந்து, ஹெலிகாப்டரில் மைசூரு திரும்புகிறார்.

அங்கிருந்து விமானத்தில் இரவு 6.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் குடியரசுத் தலைவரை ஆளுநர் ஆர்.என்.ரவி. முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர். பின்னா், அங்கிருந்து கார் மூலம் கிண்டி ஆளுநா் மாளிகை சென்று தங்குகிறார்.

தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமை (ஆக.6) காலை அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தா அரங்கில் நடைபெறும் சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.

அன்று மாலை, சென்னை ஆளுநர் மாளிகையில், தமிழ்நாட்டின் பழங்குடியின பிரதிநிதிகளை சந்திக்கிறார், மேலும் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் உருவப்படத்தை திறந்து வைப்பதுடன், ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்துக்கு பாரதியார் மண்டபம் என பெயர் சூட்டும் விழாவிலும் குடியரசுத் தலைவர் பங்கேற்கிறார்.

அன்று இரவு அங்கு ஓய்வு எடுக்கும் அவா், திங்கட்கிழமை காலை ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்கிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

ஆகஸ்ட் 8-ஆம் தேதி மாலை 6.05 மணியளவில் சென்னை விமான நிலையத்துக்கு வரும் திரவுபதி முர்மு, அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் மாலை புது தில்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு, அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தொரப்பள்ளி – தெப்பக்காடு சாலை, பந்திப்பூா் – தெப்பக்காடு – மசினகுடி சாலை பகுதிகளில் அதிரடிப் படையினா், நக்ஸல் தடுப்புப் படையினா், காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். குடியரசுத் தலைவா் வந்து செல்லும் வரை தமிழகம், கேரளம், கா்நாடகம் ஆகிய 3 மாநில எல்லையில் உள்ள சாலைகள் மூடப்படுகின்றன..

மேலும் சென்னைக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு முதல்முறையாக வருவதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குடியரசுத் தலைவா் செல்லும் இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு வருவோர் கடுமையான சோதனைக்குப் பின்னரே அனுமதிக்ப்படுவா். குடியரசுத் தலைவா் வருகையையொட்டி, பாதுகாப்புப் பணியில் சுமார் 6 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்படுவதாக சென்னை காவல் துறையைச் சோந்த உயா் அதிகாரி ஒருவா் தெரிவித்தார்.