கோவை : ஜனாதிபதி திரவுபதி முர்மு ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதல் முறையாக தமிழ்நாட்டுக்கு வருகிறார் .2 நாள் பயணமாக வரும் ஜனாதிபதி மதுரை கோவை , நீலகிரி ஆகிய இடங்களுக்கு செல்கிறார்..
அதன் விவரம் வருமாறு:- ஜனாதிபதி திரவுபதி மூர்மு தமிழக சுற்றுப்பயணத்துக்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் இன்று காலை 8:45 மணிக்கு புறப்பட்டார். மதுரை விமான நிலையத்துக்கு பகல் 11 -45 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு அவருக்கு அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு 12 -15 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவில் சென்றார் .அங்கு பூரண கும்ப மரியாதையுடன் கோவில் சார்பில் ஜனாதிபதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் சன்னதிகள் உட்பட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று தரிசனம் செய்தார். பின்னர் கோவில் இருந்து பிற்பகலில் மதுரை விமான நிலையம் புறப்பட்டார். விமான நிலையத்திலிருந்து மீனாட்சி அம்மன் கோவில் வரை 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வழி நெடுகிலும் திரண்டிருந்த மக்களை பார்த்து வணக்கம் தெரிவித்தும், கைகளை அசைத்து கொண்டே சென்றார். பின்னர் மதுரை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு மாலை 3:30 மணிக்கு கோவை விமான நிலையம் வந்து சேர்ந்தார்.ஜனாதிபதியுடன் அதே விமானத்தில் தமிழ்நாடு கவர்னர் ரவியும் உடன் வந்தார்.
கோவை விமான நிலையத்தில் கவர்னர் ரவி, தமிழ்நாடு காவல்துறைதலைமை இயக்குனர் சைலேந்திரபாபு கலெக்டர் கரந்திகுமார் பாடி,போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்,,மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.சுதாகர் மாநகராட்சி கமிஷனர், பிரதாப் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் மாலை 3:30 மணிக்கு ரேஸ்கோர்ஸ் அரசு சுற்றுலா மாளிகைக்கு சென்றார்.வழி நெடுகிலும் ரோட்டில் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று ஜனாதிபதியை வரவேற்றனர். பின்னர் சுற்றுலா மாளிகையில் ஜனாதிபதி. சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். இதையடுத்து குண்டு துளைக்காத கார் மூலம் தொண்டாமுத்தூர் ரோடு வழியாக மாலை 6 மணிக்கு ஈஷா யோகா மையத்துக்கு செல்கிறார். அன்று இரவு மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்கிறார். பின் இரவு 9- 15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கோவை ரேஸ் கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகிறார். இரவில் அங்கு தங்குகிறார்.
நாளை ( ஞாயிற்றுக்கிழமை) காலை கோவை விமான நிலையத்துக்கு காரில் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு புறப்பட்டு செல்கிறார்.அங்கு ராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார். மேலும் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கான நினைவு தூணில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். இந்த நிகழ்ச்சி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறுகிறது. பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை விமான நிலையம் சென்று தனி விமானத்தில் டெல்லி திரும்புகிறார். ஜனாதிபதி வருகையையொட்டி கோவையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான போலீசார் கோவைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். கோவையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் ஆகியோர் மேற்பார்வையில், 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். “ட்ரோன்கள்” பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் வருகையொட்டி நேற்று மாலை போலீசாரின் பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. கோவையில் உள்ள ஓட்டல்கள், லாட்ஜ்களில் தங்குவோர் குறித்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். டெல்லியில் இருந்து ஜனாதிபதியின் தனி சிறப்பு பாதுகாப்பு படை பிரிவு சேர்ந்த 20 பேர் வந்துள்ளனர். டெல்லியில் இருந்து குண்டு துளைக்காத கார்கள் கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு கோவையில் இன்றும், நாளையும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டி.ஜி.பி சைலேந்திரபாபு ஜனாதிபதியின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க நேற்று இரவு கோவை வந்தார். கோவையில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்.