கடந்த மாதம் நடந்த கர்நாடகா சட்டசபை தேர்தல், வேட்பாளர் தேர்வு, பிரசாரம் என பலவிதங்களில், பா.ஜ.,வுக்கு படிப்பினையாக அமைந்துள்ளது. பெங்களூருவில் மூன்று மணி நேரம், 26 கி.மீ., துாரம் திறந்த காரில் ஊர்வலமாக சென்றபடி பிரதமர் மோடி, ‘ஊர்வல பிரசாரம்’ நடத்தினார். இதனால், கர்நாடகா முழுதும் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்ற போதிலும், பெங்களூரு மாநகரில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில், 16ல் பா.ஜ., வென்றது. மற்ற தொகுதிகளிலும் குறைந்த ஓட்டு வித்தியாசத்திலேயே வெற்றியை இழந்துள்ளது.காங்கிரசின் கோட்டையான காந்தி நகர் தொகுதியில், இப்போது அமைச்சராகியுள்ள தினேஷ் குண்டுராவ், வெறும் 105 ஓட்டு வித்தியாசத்தில் மட்டுமே வெல்ல முடிந்தது. இதற்கு மோடியின் ‘ஊர்வல பிரசாரம்’ தான் காரணம் என, காங்கிரஸ் கட்சியினரே வெளிப்படையாக பேசி வருகின்றனர். உளவுத் துறையும் இதே கருத்தை தெரிவித்துள்ளது.எனவே, லோக்சபா தேர்தல் வெற்றிக்காக, வரும் அக்டோபரில் இருந்து ஆறு மாதங்களுக்கு, 100 தொகுதிகளில், குறிப்பாக மாநகரங்களில், திறந்த காரில் ‘ஊர்வல பிரசாரம்’ நடத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இதற்காக, நகர்ப்புறங்களில் உள்ள 100 தொகுதிகளை அடையாளம் காணுமாறு, மாநில தலைவர்கள், அமைப்பு பொதுச்செயலர்களுக்கு, பா.ஜ., தலைவர் நட்டா அறிவுறுத்தி இருப்பதாக, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
100 லோக்சபா தொகுதிகளில் ஊர்வல பிரசாரம் நடத்த பிரதமர் மோடி திட்டம்..!
சென்னை :வரும் லோக்சபா தேர்தல் வெற்றிக்காக, ஆறு மாதங்களில், 100 லோக்சபா தொகுதிகளில் ‘ஊர்வல பிரசாரம்’ நடத்த, பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.வரும் 2024 லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒன்பது மாதங்கள் இருக்கும் நிலையில், மூன்றாவது முறையும் வென்று, ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்க, பா.ஜ., வியூகம் வகுத்து வருகிறது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் வெற்றியால் உற்சாகமடைந்துள்ள காங்கிரஸ், ஆளும் பா.ஜ.,வை தோற்கடிக்க, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து வருகிறது.மேலும், 48 எம்.பி.,க்கள் உள்ள மஹாராஷ்டிராவிலும், 40 எம்.பி.,க்கள் உள்ள பீஹாரிலும் பா.ஜ.,வுக்கு எதிராக வலுவான கூட்டணியை, காங்கிரஸ் அமைத்துஉள்ளது. மோடிக்கு எதிராக களமிறங்கியுள்ள பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், ஆம் ஆத்மி, பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் போன்ற கட்சிகளையும், காங்கிரஸ் கூட்டணியில் கொண்டு வர முயற்சித்து வருகிறார். இதனால், வரும் லோக்சபா தேர்தல் களம், இப்போதே கடும் போட்டியாக மாறியுள்ளது. எதிர்க்கட்சிகளின் வியூகத்தை உடைக்க, வலுவான கூட்டணிக்கு பா.ஜ.,வும் முயற்சித்து வருகிறது.