வியட்நாமுக்கு ரூ.2,500 கோடி கடன் வழங்கும் பிரதமர் மோடி.!

தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாம், தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பான ஆசியான் அமைப்பில் முக்கிய நாடாக உள்ளது.

இந்த நாட்டின் பிரதமர் பாம் பின் சின்ஹ் 3 நாள் பயணமாக, கடந்த ஜூலை 30 ஆம் தேதி இந்தியா வந்தடைந்தார். அவருடன் அமைச்சர்கள் மற்றும் வர்த்தக தலைவர்கள் உட்பட வர்த்தக குழு ஒன்றும் வருகை புரிந்திருந்தது. அவர்களுக்கு அரசு சார்பில் ராஷ்ரபதி பவனில் வரவேற்பு வழங்கப்பட்ட நிலையில், சிறப்பு விருந்தும் வழங்கப்பட்டது. இந்நிலையில், வியட்நாம் பிரதமரின் மூன்று நாள் இந்திய பயணம் நேற்றுடன் நிறைவடைந்தது.இந்தியா வந்த பாம் பின் சின்ஹ், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது, வியட்நாம் மற்றும் இந்தியாவுக்கு இடையே 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும் இந்த சந்திப்பின் போது, 3 ஒப்பந்தங்களுக்கான விரிவான ஆய்வும் செய்யப்பட்டது. அதுமட்டுமன்றி இந்தியாவின் நிதி உதவியுடன் வியட்நாமில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ மென்பொருள் பூங்காவை இரு நாட்டு பிரதமர்களும் வீடியோ கான்ஃபரன்ஸ் வாயிலாக துவக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.இந்த சந்திப்பு குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கிழக்கு நாடுகளுடன் நெருக்கம் என்ற நம் கொள்கையிலும், வலுவான மற்றும் சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியம் என்ற தொலைநோக்கு பார்வையிலும் வியட்நாம் மிக முக்கிய நாடாக உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே வலுவான தொடர்பு உள்ளது. நாம், 2047-ல் வளர்ச்சியடைந்த நாடு என்ற இலக்குடன் பயணிக்கிறோம். அதேபோல வியட்நாமும், தொலைநோக்கு பார்வையுடன் பயணிக்கிறது என்று கூறியுள்ளார்.மேலும், இந்தியா எப்போதும் வளர்ச்சியை ஆதரிக்கிறது. மற்ற நாடுகளை ஆக்கிரமித்து, தன் எல்லையை விரிவுபடுத்துவதை எதிர்க்கிறது. இந்த வகையில், இந்தோ பசிபிக் பிராந்தியத்தில், அனைத்து நாடுகளும் சுந்ததிரமாகவும், அமைதியாகவும் இருப்பதை உறுதி செய்ய, வியட்நாமுடன் இணைந்து செயல்படுவோம் என்றும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி, வியட்நாமில் பல வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள, இந்தியா ரூ.2,500 கோடி கடன் உதவி வழங்கி  உள்ளாதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.