கடும் போருக்கு நடுவே உக்ரைன் செல்லும் பிரதமர் மோடி..!

டெல்லி: ரஷ்யா-உக்ரைன் போர் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயணத்தின் போது அவர் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியையும் சந்திக்க இருக்கிறார்.

சர்வதேச அளவில் ரஷ்ய-உக்ரைன் போர் மிகுந்த கவனம் பெற்று வருகிறது. இந்த போருக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்று உக்ரைன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஐநாவில் இது குறித்த தீர்மானங்கள் முன்மொழிப்படும் போது இந்தியாவின் ஆதரவு யாருக்கு? என எதிர்பார்ப்பு எழும். ரஷ்யா, இந்தியாவின் நீண்ட கால நட்பு நாடு. என்ன இருந்தாலும் போர் விஷயத்தில் சப்போர்ட் செய்ய முடியாது. எனவே, இந்தியா இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காது.

இருப்பினும் உக்ரைனும், ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. சமீபத்தில் மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றபோது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும் போரினால் பாதிக்கப்பட் தங்களது நாட்டுக்கு வருமாறு கேட்டுக்கொண்டார்.

இதற்கும் முன்னர் இத்தாலியில் நடந்த ஜி7 மாநாட்டில் மோடியை ஜெலன்ஸ்கி நேரடியாக சந்தித்து பேசியிருந்தார். இதுவும், இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜெலன்ஸிகியை போனில் தொடர்பு கொண்டு மோடி பேசியிருந்ததும் சர்வதேச அளவில் பெரும் கவனம் பெற்றிருந்தன. இந்த தொலைப்பேசி உரையாடலின்போது, இந்தியா-உக்ரைன் கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்கப்பட்டது என்றும், போருக்கு பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வு என்று இந்தியார தரப்பில் பேசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இப்படி இருக்கையில் அடுத்த மாதம் பிரதமர் மோடி உக்ரைனுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயணத்தின்போத அவர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் புதினை சந்தித்திருந்த பிரதமர் மோடி, அவரிடம் “ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக அப்பாவிக் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்திருப்பது மனதுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. போர்க்களத்தில் அமைதிக்கான எந்தத் தீர்வும் கிடைக்காது. பேச்சுவார்த்தையால் மட்டுமே அது சாத்தியம். அமைதியை கொண்டுவர இந்தியா ஒத்துழைக்கும். அமைதியை மீட்டெடுப்பதற்கு அனைத்து வழிகளிலும் ஒத்துழைக்க இந்தியா தயாராக உள்ளது.

இந்தியா அமைதியின் பக்கம் உள்ளது என்பதை நான் உங்களுக்கும் உலக சமூகத்துக்கும் உறுதியளிக்கிறேன். புதிய தலைமுறையினருக்கு ஒளிமயமான எதிர்காலத்தைப் பெற, அமைதிப் பேச்சுகள் தேவை. மாறாக வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுக்கு மத்தியில் வெற்றி கிடைக்காது. ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வரும் தீவிரவாத தாக்குதலால் கடந்த 40 ஆண்டுகளாக தீவிரவாதத்தின் சவால்களை இந்தியா எதிர்கொண்டுள்ளது. அனைத்து வகையான தீவிரவாதத்தையும் நான் கண்டிக்கிறேன்” என்று கூறியிருந்தார். இப்படி இருக்கையில் மோடியின் உக்ரைன் பயணம், போரில் இந்தியாவின் ஆதரவு உக்ரைன் பக்கம் சாய்கிறதோ? என்கிற கேள்வியையும் எழுப்பியுள்ளது.