பட்டியல் இன மக்களுக்கான சலுகைகளை, கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனி தீர்மானம் கொண்டு வருகிறார்.
இந்தியாவில் இந்து, சீக்கியம், புத்த மதத்தை பின்பற்றும் பட்டியல் இனத்தவர் மட்டுமே, அவர்களுக்கான உரிமைகள், சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கிறிஸ்துவர்களாகவும், இஸ்லாமியர்களாகவும் மதம் மாறிய பட்டியல் இனத்தவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவதில்லை. இதுதொடர்பான வழக்குகள் 2004 ஆம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இதனிடையே மதம் மாறிய கிறிஸ்வர்கள், இஸ்லாமியர்களுக்கு பட்டியல் இனத்தவர்களுக்கான சலுகைகளை வழங்குமாறு ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் பரிந்துரைத்தது. இதை ஏற்க மறுத்துள்ள மத்திய அரசு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் மற்றொரு குழுவை அமைத்துள்ளது. எனினும், புதிய குழுவின் பரிந்துரைக்கு காத்திருக்காமல், வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.