கோவையில் சொத்து குவிப்பு புகார்: மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை..! 

கோவையில் சொத்து குவிப்பு புகார் தொடர்பாக மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை..,!  கோவை புதூரில் வசித்து வருபவர் ரமணன் ( வயது 45) இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் போக்குவரத்து துறையில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் வார விடுமுறை நாட்களில் ஓசூரில் இருந்து கோவை புதூருக்கு வந்து செல்வார் .இந்த நிலையில் அவர் வருமானத்தை விட அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதன் பேரில் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திவ்யா தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் ஒரு வாகனத்தில்கோவை புதூரில் உள்ள ரமணன் வீட்டுக்கு சென்றனர். பின்னர் வீட்டிற்குள் சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அங்கிருந்தவர்களின் செல்போன்களைபறிமுதல் செய்து “ஸ்விட்ச் ஆப்’ செய்தனர் .மேலும் வீட்டில் இருப்பவர்கள் வெளியே செல்லவோ அல்லது வெளி நபர்களை வீட்டில் உள்ளே வருவதற்கோ அனுமதிக்கவில்லை. தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வீட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தினர். இந்த சோதனைநடந்தபோது மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் ரமணன் வீட்டிலிருந்தார். அவரிடம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது எப்படி? என்பது குறித்து விசாரணை நடத்தினர். மேலும் வீட்டிலிருந்து ஆவணங்களையும் போலீசார் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூறியதாவது:- மோட்டார் வாகன ஆய்வாளர் தனது வருமானத்தை ரூ.1 கோடிக்கு மேல் சொத்து சேர்த்துள்ளார் .இது 250 சதவீதம் அதிகமாகும். இது குறித்து புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மோட்டார் வாகன ஆய்வாளர் ரமணன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.