கோவை ரயில் நிலையத்தில் மறியல் – 30 விவசாயிகள் கைது..!

விவசாயிகள் உற்பத்தி செய்யும விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய – மாநில அரசுகள் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் அரியானா மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 19ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் சண்டிக்கரில் விவசாயிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க தலைவர்கள்கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்காத மத்திய – மாநில அரசை கண்டித்து விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோவை ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்க சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து கோவை ரயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று கோவை ரயில் நிலையம் முன் ஏராளமான விவசாயிகள் குவிந்தனர் . அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . இந்த போராட்டத்திற்கு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் வேலுசாமி, பொருளாளர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .அப்போது விவசாய விளை பொருட்களுக்கு ஆதார விலையை நிர்ணயம் செய்யக்கோரி கோஷம் எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் ரயில் நிலையத்தில் புகுந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே சிறிது நேரம் தள்ளு -முள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 30 விவசாயிகளை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்தனர் .அவர்கள் வேனில் ஏற்றிச் செல்லப்பட்டனர்.இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.