மின்கட்டணம், சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம்..!

கோவை:-
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கோவை மாவட்டத்தை தி.மு.க தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும், மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் குண்டும், குழியுமாகவும், சேறும், சகதியாகவும் காணப்படும் சாலைகளை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தியும், பொதுமக்களின் வேதனைகளை கண்டு கொள்ளாமல் சொத்துவரி, மின் கட்டணம், பால், கட்டுமான பொருட்களின் விலையை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கோவையில் அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதேபோல் கோவையை உலகத் தரத்திற்கு உயர்த்தும் வகையில் அ.தி.மு.க அரசு கொண்டு வந்த திட்டங்களான பாலங்கள், விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரெயில், மேற்கு புறவழிச்சாலை, சீர்மிகுநகரம் உள்ளிட்ட திட்ட பணிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்றது.

கோவை சிவானந்தா காலனியில் காலை 9 மணிக்கு உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. போராட்டத்தையொட்டி காலைமுதலே அ.தி.மு.க. தொண்டர்கள் உண்ணாவிரத பந்தலில் குவிந்தனர். இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், எதிர்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ,, தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், தனபால், செ.தாமோதரன், ஏ.கே.செல்வராஜ், கே.ஆர்.ஜெயராம், வி.பி.கந்தசாமி, டி.கே.அமுல்கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உண்ணாவிரத போராட்டத்தை முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து எழுச்சி உரையாற்றினார்.
காலை 9 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரத போராட்டமானது மாலை 5 மணி வரை நடந்தது. மாலை 5 மணிக்கு அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகள் மற்றும் திருப்பூர் அவினாசி தொகுதியை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், வார்டு செயலாளர்கள், தொண்டர்கள் என 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அ.தி.மு.கவினர் கலந்து கொண்டனர். போராட்டத்தையொட்டி அங்கு முக்கிய நிர்வாகிகள் அமரும் வகையில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றவர்கள் நிழலில் அமரும் வகையில் சாமியானா பந்தல் போடப்பட்டிருந்தது.

போராட்டம் நடைபெறும் இடத்தில் ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டனர். அவர்கள் அந்த பகுதியில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதவிர போராட்டம் நடைபெறுவதையொட்டி அந்த வழியில் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து கார் மூலம் கோவைக்கு வந்தார். அவருக்கு ஒருங்கிணைந்த கோவை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர்.