கோவை துடியலூர் அடுத்த செங்காளிப்பாளையம் அருகே காந்தி காலனி உள்ளது. அங்கு பஸ் நிறுத்தம் அருகே பல்வேறு கட்சி கொடி கம்பங்கள் உள்ளன.
இந்த நிலையில் அந்த பகுதியில் பா.ஜ.க.வின் கொடி கம்பம் அமைக்க அந்த பகுதியை சேர்ந்த கட்சியினர் முடிவு செய்தனர். இதையடுத்து கொடி கம்பம் அமைப்பதற்கான பணிகளை செய்து வந்தனர். அப்போது ஏ.டி காலனியை சேர்ந்த பொதுமக்கள் பா.ஜ.க கொடி கம்பம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பொதுமக்களும், பா.ஜ.க.வினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்கள் எதிர்ப்பு வலுத்ததால் பா.ஜ.க.வினர் கொடி கம்பம் அமைப்பதை நிறுத்துவதாக தெரிவித்தனர். இந்த நிலையில் அடுத்த தெருவை சேர்ந்த பா.ஜ.க.வினர் 2 பேர் அங்கு வந்தனர். அவர்கள் கொடி கம்பத்தை கட்டாயம் அமைக்க வேண்டும் என பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால் பொதுமக்கள், பா.ஜ.க.வினர் அங்கு திரண்டனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பெரியநாயக்கன் பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம், துடியலூர் இன்ஸ்பெக்டர் தாமோதரன், சப்-இன்ஸ்பெக்டர் முரளி உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிந்தனர். மேலும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் இருதரபினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.