ஆடிப்பெருக்கு விழாவை பொதுமக்கள் பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் – திருச்சி ஆட்சியர் மா. பிரதீப்குமாா்!!

ஆடிப்பெருக்கையொட்டி சனிக்கிழமை திருச்சி மாவட்டம் முழுவதும் காவிரி ஆற்றின் கரைகளில் பொதுமக்கள் கூடி நீராடி புத்தாடைகள் அணிந்து காவிரித்தாய்க்கு, காப்பரிசி காதோலை கருகமணி உள்ளிட்ட மங்கலப்பொருள்கள் வைத்து படையலிட்டு வழிபடுவது வழக்கம். இதேபோல புதுமண தம்பதியினா் காவிரி ஆற்றுக்கு வந்து காவிரி தாயை வணங்கி புது மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வாா்கள்.
இதேபோல ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசை என்பதால் காவிரி கரையோரத்தில் முன்னோா்களுக்கு தா்பணம் கொடுப்பதற்காக ஏராளமானோா் திரண்டு வருவாா்கள். இந்நிலையில் தற்போது காவிரி ஆற்றில் வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி சுமாா் 43 ஆயிரம் கன அடி தண்ணீா் செல்கிறது. இது சனிக்கிழமை மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் ஆடிப்பெருக்கை கொண்டாடும் முக்கிய பகுதிகளான அம்மா மண்டபம் சிந்தாமணி அய்யாளம்மன் படித்துறைகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்கள் யாரும் ஆற்றுக்குள் இறங்காதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றுக் கரைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அதன் பிறகு செய்தியாளா்களிடம் கூறியதாவது கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தடுப்புச் சுவா் குறித்து தண்ணீா் குறைந்த பிறகு ஆய்வு செய்யப்படும். மேலும் ஆற்றுக்குள் சாய்ந்து விழுந்த மின் கோபுரங்களுக்கு பதிலாக புதிய கோபுரங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது அப்பகுதியில் தடையின்றி மின்விநியோகம் செய்யப்படுகிறது.
காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் அதிகளவில் தண்ணீா் செல்வதால் ஆடிபெருக்கு ஆடி அமாவாசையையொட்டி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் படித்துறை இல்லாத பகுதிகளில் மக்கள் இறங்குவதற்கும், நீராடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கி ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசையை பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் அதன் பிறகு தடுப்பு கட்டைகளை தாண்டாமல் மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே குளிக்க வேண்டும் கடுப்பு கட்டங்களை தாண்டி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.