ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் 2022-2023ம் ஆண்டு சட்டமன்ற அறிவிப்பு எண்:160ன் படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயிலில் ஒன்பது நிலை இராஜகோபுரம் கட்டப்படும் என்று வெளியிட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து, ரூ.11.50 கோடி மதிப்பீட்டில் 112 அடி உயரம் கொண்ட ஒன்பது நிலை இராஜகோபுரம் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி தொழில்நுட்ப அங்கீகாரம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி அங்கீகாரம் பெறப்பட்டது. இதேபோல் பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் வளாகத்தில் சுற்றுச்சுவர் கட்ட ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் திருக்கோயில் வளாகத்தில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி தொழில்நுட்ப அங்கீகாரம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி அங்கீகாரம் பெறப்பட்டு, 574 மீட்டர் நீளம், 2.10 மீட்டர் உயரத்திலான சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக நேற்று துவக்கி வைத்தார். அதன்பிறகு திருக்கோயிலின் திருக்குண்டம் முன்புறம் ஒன்பது நிலை இராஜகோபுரம் அமையுமிடத்தில் பூமிபூஜை போடப்பட்டது.
இவ்விழாவில் ஈரோடு கலெக்டர் கிருஷ்ணுன்னி. ஈரோடு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, திருக்கோயில் துணை ஆணையர் மேனகா, உதவி காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் ஐஏஎஸ், ஈரோடு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நவமணி கந்தசாமி, சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கே.சி.பி.இளங்கோ, சத்தியமங்கலம் நகர்மன்ற தலைவர் ஜானகி ராமசாமி, மாவட்ட செயலாளர் நல்லசிவம், திருக்கோயில் பரம்பரை அறங்காவலர்கள் புருசோத்தமன், இராஜாமணி தங்கவேல், மகேந்திரன், சத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் தேவராஜ், சிக்கரசம்பாளையம் ஊராட்சி தலைவர் சுப்பிரமணியன், கோணமூலை ஊராட்சி தலைவர் குமரேசன் (எ) செந்தில்நாதன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.