ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.சகோதர, சகோதரிகள் இடையே நிலவும் பாசத்தையும் அன்பையும் வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் பண்டிகை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
இந்த பண்டிகையின் போது, பெண்கள் தமது சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாக கருதுவோரின் கை மணிக்கட்டில் ரக்ஷா பந்தன் கயிறை கட்டுவது வழக்கம். அழகிய வடிவில் கட்டப்படும் இந்த ரக்ஷா பந்தன் கயிறு சகோதர சகோதரியின் பாசப் பிணைப்பை வெளிப்படுத்தும் விதமாக அமைகிறது.
அந்தவகையில், பிரதமர் மோடி டெல்லியில் சிறுமிகளுடன் ரக்ஷா பந்தனை கொண்டாடினார். பிரதமர் மோடிக்கு குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவிகள் பலரும் ‘ராக்கி’ கட்டினர். இதனிடையே ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்தப் பண்டிகை அனைவரின் வாழ்க்கையிலும் நல்லிணக்கம் மற்றும் நட்புணர்வை ஆழப்படுத்தட்டும் என்றும் மோடி வாழ்த்தியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில், பிரதமர் கூறியிருப்பதாவது,”எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ரக்ஷா பந்தன் வாழ்த்துகள். சகோதரிக்கும் சகோதரனுக்கும் இடையிலான சிதைக்க முடியாத நம்பிக்கை மற்றும் அளவற்ற அன்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த ரக்ஷா பந்தன் பண்டிகை, நமது கலாச்சாரத்தின் புனிதமான பிரதிபலிப்பாகும். இந்த விழா அனைவரின் வாழ்விலும் அன்பு, நல்லிணக்கம் மற்றும் நட்புணர்வை ஆழப்படுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.