நேருக்கு நேர் விவாதிக்க தயார்… அண்ணாமலைக்கு நேரடி சவால் விட்ட சுப்பிரமணியன்.!

மிழகத்தில் எந்த மருத்துவமனையில் மருத்துவர்களுடைய அலட்சியத்தால் மற்றும் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்படுகிறது என்பது குறித்த புள்ளிவிவரத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தால் அவரோடு நேருக்கு நேர் விவாதிக்க நான் தயார் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இல்லை என்று கருதுகிறேன். அவர் என்னை பின் தொடர்ந்தால் தினம்தோறும் நான் இந்த துறைக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், சுகாதாரத் துறையில் ஆய்வு மேற்கொள்ளும் அனைத்து பணிகளையும் அவர் அறிந்து கொள்ள முடியும்.

கஞ்சா கருப்பு பொது நிகழ்ச்சி ஒன்றில், தான் தவறுதலாக தெரிவித்த கருத்துக்கு வருந்துகிறேன். இந்த அரசு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது, தன்னை மன்னிக்கவும் என்று கூறியிருந்தார். அண்ணாமலை இதற்கு என்ன சொல்லப் போகின்றார். எந்த மருத்துவமனையில் மருத்துவருடைய அலட்சியத்தால் அல்லது மருத்துவர் இல்லாத பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்படுகிறது என்று புள்ளி விவரங்களோடு அண்ணாமலை தயாரானால் அவருடன் நேருக்கு நேர் விவாதிக்க நான் தயாராக இருக்கின்றேன். சமீபத்தில் திருநெல்வேலியில் 4 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் ஏற்கனவே மருத்துவமனை அறிக்கையை முதல்வர் வெளியிட்டுள்ளார். மருத்துவர்கள் இல்லாததால் குழந்தை இறந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வடிகட்டிய பொய்யை கூறுகின்றார் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.