என்ன தளபதி பார்க்க தயாரா..? திருச்சியில் த.வெ.க. கட்சியின் முதல் மாநாடு அறிவிப்பு..!!

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய். ஆரம்பத்தில் இருந்தே தனது படங்களில் சில அரசியல் கருத்துக்களை தெரிவித்து வந்தார். அந்த வகையில் தனது அரசியல் விருப்பத்தை அண்மையில் அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கட்சி தொடங்கினார்.
கட்சி பெயரை அறிவித்தாலும் நேரடி அரசியலில் ஈடுபடாமல், கோட் திரைப்படத்தில் நடித்து வந்தார். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே தனது கட்சி பெயரை அறிவித்த விஜய் கோட் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக ஒரு படத்தில் நடிப்பதாகவும் 2026 சட்டமன்ற தேர்தலில் தான் தமிழக வெற்றிக் கழகம் போட்டி என்றும் அதற்கு முன் கொள்கைகள் சின்னம் என படிப்படியாக வெளியிடுவோம் என்றும் கூறியிருந்தார்.
இதையடுத்து கட்சியில் உறுப்பினர்களை சேர்கும் பணி, கட்சி உள்கட்டமைப்புகளை வலுவாக்குவது என கட்சி பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் பலியான நிலையில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் என விஜய் அறிவுறுத்தியிருந்ததோடு நேரிலும் சென்று பார்த்து பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் தெரிவித்தார். இதேபோன்று கடந்த ஆண்டை போலவே தமிழ்நாட்டில் சட்டமன்றத் தொகுதி வாரியாக, 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசுகளை நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய விஜய் நல்ல தலைவர்கள்தான் தமிழ்நாட்டில் இல்லை. இன்னும் நமக்கு நிறைய தலைவர்கள் தேவைப்படுகின்றனர் என்று பேசியிருந்தார். இதேபோன்று நீட் தேர்வு தேவையில்லை என்றும் விஜய் பேசியிருந்தார். எனினும் இன்னும் கட்சி கொடி கொள்கை என்ன என்று அறிவிக்காமல் தொடர்ந்து பட வேலைகளில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது. இதையடுத்து விஜய் நேரடி அரசியலில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.
கட்சிக் கொடி கொள்கையினை அறிமுகப்படுத்துவதற்காகவும் தமிழகத்தில் பிரமாண்ட மாநாடு நடத்த விஜய் திட்டமிட்டார். இதற்கான பணிகளும் வேகமாக நடந்து வந்தது. எல்லாரும் வந்து செல்வதற்கு வசதியாக விஜய தமிழகத்தின் மையப்பகுதியில் மாநாடு நடத்த முடிவு செய்தார். இதற்காக திருச்சி மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை விஜய் தேர்வு செய்து இருந்தார். இதில் எந்தெந்த இடங்கள் உள்ளன என்று தவெக நிர்வாகிகள் ஆய்வு செய்தனர்.திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் இந்த இடத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை. பல்வேறு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, இறுதியில் அந்த இடங்களில் நடத்துவதற்கு அனுமதி கிடைக்காமல் இருந்தது. இந்த நிலையில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல் மாநாட்டை நடத்த திருச்சியில் உள்ள பொன்மலை ஜிகார்னர் மைதானத்தை தேர்வு செய்துள்ளனர். விஜயின் முதல் மாநாடு என்பதாலும், தமிழகத்தில் இருந்து 10 லட்சம் பேர் வரும் அளவிற்கு இடம் இருக்க வேண்டும் என்றும் பார்க்கிங் வசதி என அனைத்து வசதிகளும் இந்த மைதானத்தில் இருக்கிறதா என்று ஆய்வு செய்தனர்.
திருச்சி பொன்மலை ஜிகார்னர் மைதானம் உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், இதற்காக அனுமதி கோரி ரயில்வே கோட்ட மேலாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த இடத்தில் தான் விஜயின் முதல் மாநாடு நடக்கப்போகிறது என்று உறுதிப்படுத்தாத தகவல்கள் கிடைத்துள்ளன. வரும் செப்டம்பர் 20, 23, 25 ஆகிய தேதிகளில் இந்த மாநாடு நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது.
10 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் 100 ஏக்கருக்காவது மைதான இருக்க வேண்டும். ஆனால் பொன்மலை ஜிகார்னர் மைதானம் சற்று குறைவாகவே இருக்கும் என்பதால் இங்கு நடத்தப்படுவது சிரமம் தான் என்றும் கூறப்படுகிறது. தற்போது இந்த மைதானம் எத்தனை ஏக்கரில் இருக்கிறது என்பதை அளவீடு செய்யும் பணியில் ரயில்வே துறை சார்பில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி பொன்மலை ஜிகார்னர் மைதானத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக மற்றும் பாஜக கூட்டங்களை நடத்தியுள்ளது. பாஜக கூட்டத்தில் பிரதமர் மோடி இந்த பொன்மலை ஜிகார்னர் மைதானத்தில் பிரசாரம் செய்துள்ளார். மிக முக்கியமான அரசியல் கட்சிகளுகு பல்வேறு திருப்புமுனைகளை ஏற்படுத்திய மைதானமாக இது கருதப்படுகிறது. எனவே விஜய் அரசியலில் ஜொலிக்க இந்த மைதானம் கைகொடுக்குமா எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.