ஓபிஎஸ்-க்கு கிடைத்த கிணறு வெட்டிய ரசீது.. தேர்தல் ஆணையம் இபிஎஸ்-க்கு கொடுத்த பெரிய அதிர்ச்சி..!

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அளித்துள்ள பதில் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் பொதுக்குழு வழக்கில் இந்த பதில் பெரிய திருப்பங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில் கட்சியில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக பொதுக்குழு வழக்கு வரும் 4ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடக்க உள்ளது. இந்த வழக்கில் பெரும் திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படிப்பட்ட நிலையில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவில் அடுத்தடுத்து சில நல்ல செய்திகள் சென்றன.

ஜி 20 கூட்டம் தொடர்பான ஆலோசனையில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிசாமி கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லி சென்றார். பாஜகவிற்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் கருத்து வேறுபாடு நிலவும் நிலையில் இந்த டெல்லி பயணம் அதிக கவனம் பெற்றது. ஜி 20 கூட்டமைப்பிற்கு தலைமை வகிக்க இந்தியா தேர்வாகி உள்ளது. 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் பிரம்மாண்ட உச்சி மாநாடும் நடக்க உள்ளது. இந்த நிலையில்தான் இதை பற்றி ஆலோசனை செய்ய பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடித்ததில் எடப்பாடி பழனிசாமிக்கு கீழ், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்று கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து கிட்டத்தட்ட மத்திய அரசு இவரை இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டதாக வாதங்கள் வைக்கப்பட்டன. இது எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பு இதனால் மிகுந்த குஷியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த அதிமுகவின் வரவு செலவு கணக்குகளை தலைமை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை எடப்பாடி தரப்பினர் கொண்டாடி வருகிறார்கள். இடைக்கால பொதுச்செயலாளர் என்று கையெழுத்துப் போட்டு தாக்கல் செய்த வரவு செலவு கணக்கை அக்டோபர் 3-ந்தேதி ஒப்படைக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் கொடுத்த ஒப்புகையை (அக்கனாலெட்ஜ்மெண்ட்) தேர்தல் ஆணையம் தங்கள் இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இதெல்லாம் போக இன்னொரு பக்கம் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசனை செய்ய மத்திய சட்ட அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு சென்றுள்ளது. அந்த வகையில் அதிமுகவிற்கும் அழைப்பு சென்றுள்ளது. இதில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் அழைப்பு சென்றுள்ளது. அதிமுகவில் இருந்து வேறு யாருக்கும் அழைப்பு செல்லவில்லை. ஓ பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு செல்லாத நிலையில் எடப்பாடிக்கு மட்டும் அழைப்பு சென்றுள்ளது. இதனால் எங்கே தேர்தல் ஆணையம் எடப்பாடியை இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரித்துவிட்டதோ என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில்தான் புலம் பெயர்ந்தோருக்கு அந்தந்தப் பகுதிகளில் வாக்களிக்க வசதி செய்யும் ரிமோட் வாக்குப்பதிவு முறை குறித்து விளக்கம் கேட்க அதிமுகவிற்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியது. ஜனவரி 16ம் தேதி நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள அதிமுகவிற்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த கடிதத்தை எடப்பாடி தரப்பினர் திருப்பி அனுப்பி உள்ளனர். இதற்கு தற்போது தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு பதில் அளித்துள்ளார். அதில், தேர்தல் ஆணையத்திடம் இந்த தகவல்தான் உள்ளது. இந்திய தேர்தல் ஆணைய ஆவணத்தில் அப்படித்தான் இருக்கிறது. அதில், அதிமுகவில் இன்றைய தேதி வரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள்தான் உள்ளது, என்று குறிப்பிட்டுள்ளார்.

அதோடு ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் தொடர்கிறார் என்றும் குறிப்பிட்டு உள்ளார். இதன் அர்த்தம், அதிமுகவில் இப்போது ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவியே இல்லை. எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அளித்துள்ள பதில் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் பொதுக்குழு வழக்கில் இந்த பதில் பெரிய திருப்பங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் முன்னதாக சட்ட ஆணையம் தன்னை இடைக்கால பொதுச்செயலாளர் என்று அழைத்தது, தேர்தல் ஆணையம் தனது வரவு செலவு கணக்குகளை ஏற்றுக்கொண்டதை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம் என்று எடப்பாடி திட்டம் போட்டு இருந்தார்.

இதை உச்ச நீதிமன்றத்தில் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி வாதம் வைக்க திட்டம் போட்டதாக கூறப்பட்டது. எங்களுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கொடுத்துவிட்டது. நாங்கள் கொடுத்த வரவு செலவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுவிட்டது. அதனால் பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி தரப்பு கோரிக்கை வைக்க பிளான் போட்டது. ஆனால் தற்போது தேர்தல் ஆணையமே.. நீங்கள் இடைக்கால பொதுச்செயலாளர் இல்லை என்று கூறிவிட்டது. இதை தற்போது ஓ பன்னீர்செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளன. பாருங்க.. நான்தான் இப்போதும் ஒருங்கிணைப்பாளர் என்று ஓபிஎஸ் வாதம் வைக்க வாய்ப்புகள் உள்ளன. கிட்டத்தட்ட தேர்தல் ஆணையத்தின் இந்த பதில் ஓ பன்னீர்செல்வத்திற்கு கிடைத்த கிணறு வெட்டிய ரசிது போல மாறி உள்ளது!