கோவை காந்திபுரம் மத்திய பஸ் நிலையம் அருகே அண்ணா சிலை எதிர்ப்புறம் மத்திய சிறை சுற்று சுவரை ஒட்டி 10 பெட்டி கடைகள் செயல்பட்டு வந்தது. இதில் செருப்பு கடைகள் டீக்கடைகள் இயங்கி வந்தது. இந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் புல்டோசர் மூலம் இன்று அகற்றினார்கள். இதில் உடல் ஊனமுற்ற முத்துசாமி விமலா ஆகியோருக்கு மாநகராட்சி சார்பில் 2 கடைகள் வழங்கப்பட்டிருந்தது. இந்த கடைகளுக்கு மாதம் ரூ.2500 வாடகை செலுத்தி வந்தார்களாம். மின் இணைப்பும் கொடுக்கப்பட்டிருந்தது. 8 கடைகளுடன் இந்த இரு கடைகளும் அகற்றப்பட்டதால் மாற்றுத்திறனாளிகளான முத்துசாமியும் விமலாவும் கதறி அழுதனர்.இவர்களுக்கு மாநகராட்சி சார்பில் உடல் ஊனமுற்றோர்கள் என்ற பெயரில் ஏற்கனவே மாநகர பெண்கள் காவல் நிலையம் அருகே 2 கடைகள் கொடுக்கப்பட்டிருந்தது. அங்கு மாநகராட்சி கழிப்பிடம் கட்டப்பட்டதால் இந்த இடத்தை மாநகராட்சியினர் ஒதுக்கி கொடுத்துள்ளனர். அதை இப்போது மாநகராட்சி அப்புறப்படுத்தி விட்டது. இதையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது..