கோவை வனப் பகுதியில் ஆண் சடலம் மீட்பு!!!
கோவை, போளுவாம்பட்டி வனப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது.
கோவை மாவட்டம், போளுவாம்பட்டி வனச் சரகத்துக்கு உள்பட்ட வனப் பகுதியில் வரையாடு கணக்கெடுப்புப் பணியில் வனத் துறையினர் ஈடுட்டு உள்ளனர். வனத் துறை ஊழியர்கள் முருகன், மருதமணி, உதயவாணன், காளிமுத்து, கணேஷ் ஆகியோர் வரையாடு கணக்கெடுப்புப் பணிக்காக, சிறுவாணி சாலையில் உள்ள வெள்ளப்பதி பழங்குடி கிராமத்தை அடுத்த அடர் வனப் பகுதிக்குள் சென்றனர்.
அப்போது, தேன்வரை சரகம் என்ற இடத்தில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத நிலையில் ஆண் சடலம் கிடப்பதைக் கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து வனத் துறை உயர் அதிகாரிகளுக்கும், காருண்யா நகர் போலீஸாருக்கும் தகவல் அளித்தனர்.
இதையடுத்து சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார் உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலமாகக் கிடந்தவருக்கு 45 வயது இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வன விலங்குகள் தாக்கியதற்கான அடையாளங்கள் இல்லை என்பதை முதல்கட்ட ஆய்வில் வனத் துறையினர் உறுதி செய்து உள்ளனர். இது குறித்து காருண்யா நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.