கோவையில் மாயமான மூதாட்டி கிணற்றில் பிணமாக மீட்பு..

கோவை மாவட்டம் அன்னூரை அடுத்த ஆயகவுண்டர் புதூரை சேர்ந்தவர் சண்முகம். இவரது தாயார் பொன்னம்மாள் (வயது 63).

இந்த நிலையில் பொன்னம்மாளுக்கு கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் திருப்பூர் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்புவார். இதேபோன்று சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகம் தாயாரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் அன்னூர் போலீசில் தாய் மாயமானதாக புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில் அன்னூர் போலீசாருக்கு பூலுவபாளையம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் பொன்னம்மாள் நீரில் மூழ்கி இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பொன்னம்மாளின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமான மூதாட்டி கிணற்றில் பிணமாக மீட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.