மின் கசிவால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்காக புதிய மின் இணைப்பு பெறுபவர்கள் ‘ரெசிடுயல் கரென்ட் டிவைஸ்’ என்ற கருவியை பொறுத்த வேண்டும் என்று, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், தமிழ்நாட்டில் மின் பழுது மற்றும் மின்கசிவினால் ஏற்படும் மின்விபத்துகளால் உண்டாகும் மனித உயிரிழப்புகளை தடுக்க, தமிழ் நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், மின்சாரப் பகிர்மான விதித் தொகுப்பு 16(2A)ன் படி, புதிய மின்னிணைப்பு பெறுபவர்கள் ஆர்.சி.டி (RCD) என்றழைக்கக்கூடிய ரெசிடுயல் கரண்ட் டிவைஸ் (Residual Current Device) என்ற உயிர்காக்கும் சாதனத்தை தங்களுடைய மின்னிணைப்பில் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நடப்பு மழைக்காலங்களில் அதிகரித்துவரும் மின் விபத்துகள் மற்றும் அதன் காரணத்தால் ஏற்படும் மனித உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு புதிய மின்நுகர்வோர்கள் மட்டுமல்லாது தற்போதுள்ள அனைத்து மின்நுகர்வோர்களும் ஆர்.சி.டி (RCD) எனும் உயிர்காக்கும் சாதனத்தை அவரவர்கள் மின்னிணைப்பில் தவறாமல் பொருத்தி விபத்தை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கடந்த சில மழைக் கால மாதங்களில் பல வகைகளில் மின் விபத்துகளால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அவற்றுள் சில:
வயதான தம்பதியர் தற்செயலாக அடுக்குமாடி வீட்டின் முன்புறம் உள்ள இரும்பு கேட்டை (Gate) திறக்க முற்பட்ட போது,
ஒரு தொழிலாளி கடையின் ஷட்டரை (Shutter) திறக்க முற்பட்ட போது, (III) ஒரு பெண் அவரது வீட்டில் உள்ள கொடிக் கம்பியில் துணிகளை உலர்த்த முற்பட்ட போது.
ஒரு சிறுவன் பூங்காவில் உள்ள மின்விளக்குக் கம்பத்தை தொட்ட போது, (V) அரசு ஊழியர் ஒருவர் மழைப் பெய்யும் நேரத்தில் மோட்டரை (Motor) இயக்க முற்பட்ட போது.
மாணவர் ஒருவர் வீட்டிலுள்ள UPS பழுது பார்க்க முற்பட்ட போது.
மேற்கண்ட விபத்துகள் சில உதராணங்களே தவிர முழுமையானதல்ல. ஆர்.சி.டி (RCD) எனும் உயிர்காக்கும் சாதனத்தை மின்னிணைப்பில் பொருத்தியிருந்தால் மேற்கண்ட மின் விபத்துகளைத் தவிர்த்திருக்க முடியும். ஆயிரங்கள் செலவில் ஆர்.சி.டியை (RCD) நிறுவுவதன் மூலம் விலைமதிப்பற்ற மனித உயிர்கள் காப்பாற்றப்படும்.
எனவே, வீடு, கடை, தொழில், பண்ணை வீடு. கல்வி நிறுவனங்கள். பொது இடங்கள் மற்றும் தற்போதுள்ள அனைத்து வகையான மின் நுகர்வோர்களும், மனித உயிர் பாதுகாப்பின் அடிப்படைத் தேவையான ஆர்.சி.டி (RCD) சாதனத்தை அவரவர் மின்னிணைப்பில் நிறுவ அறிவுறுத்தப்படுகிறார்கள்.