கோவை போத்தனூர் குறிச்சி பிரிவை சேர்ந்தவர் அப்துல் ரஷீத் ( வயது 61) இவர் கோவை மாநகர போலீசில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவரிடம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அப்பாஸ், முபாரக், கோவையை சேர்ந்த ரியாஸ் திருப்பூர் சேர்ந்த ஷபிக் ஆகியோர் வர்த்தக முதலீட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறினார்கள் .இதை உண்மை என்று நம்பிய அப்துல் ரஷீத் அவர்களிடம் ரூ. 8 லட்சம் கொடுத்தார். பணத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் வர்த்தகத்தில் முதலீடு செய்து லாபம் தொகையை வழங்கவில்லை. மேலும் அசல் தொகையையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த அப்துல் ரஷீத் அவர்களிடம் சென்று தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டார். ஆனால் அவர்கள் பல்வேறு காரணங்களை கூறி பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அப்துல் ரஷீத் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் அப்பாஸ், முபாரக், ரியாஸ், ஷபிக் ஆகிய 4 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.