கஞ்சா விற்ற சகோதரர்கள் கொலைக்கு பழிக்குப்பழி… ஊராட்சி மன்ற தலைவர் வெடிகுண்டு வீசி படு கொலை செய்த வழக்கில் 10 கைது- குற்றவாளிகள் பரபரப்பு வாக்குமூலம்..

சென்னை: தாம்பரம் அருகே ஊராட்சி மன்ற தலைவர் வெடிகுண்டு வீசியும், அரிவாளாலும் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 10 பேரை அதிரடியாக தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.

அண்ணன், தம்பியை கொலை செய்ததால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, அவரை பழிக்குப்பழி வாங்கியதாக கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். தாம்பரம் அருகே மாடம்பாக்கம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ஸ்கெட்ச் (எ) வெங்கடேசன் (48). இவரது முதல் மனைவி ஜோதி மற்றும் மகள் பிரிந்து சென்றுவிட்டனர். இதனால் கவிதா என்பவரை வெங்கடேசன் இரண்டாவதாக திருமணம் செய்தார். கடந்த ஓராண்டுக்கு முன்பு மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தம்பிகள் 9 பேர் கஞ்சா விற்பது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தது.

இதுகுறித்து வெங்கடேசன் போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதனால் அந்த கும்பலுக்கும், வெங்கடேசனுக்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, கடந்த ஓராண்டுக்கு முன்பு ஒரு கும்பல் வெங்கடேசனை கொலை செய்ய திட்டமிட்டு அவரை வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டினர். அதில், கையில் பலத்த காயமடைந்த வெங்கடேசன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் நடந்த சில மாதங்களில் கடந்தாண்டு ஏப்ரல் 29ம் தேதி கஞ்சா விற்பனை வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்ட குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் முகமது இமாம், முகமது இஸ்மாயில் ஆகிய 2 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக மணிமங்கலம் போலீசார் 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்டதற்கு பின்னர் அந்த குடும்பத்தினர் மாடம்பாக்கம் பகுதியிலிருந்து காலி செய்துவிட்டு வேறு பகுதிக்கு சென்று விட்டனர். இருப்பினும், அந்த இரட்டை கொலைக்கு வெங்கடேசன் தான் காரணமாக இருக்கும் என அந்த குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தம்பிகள் நினைத்து, வெங்கடேசனை பழிவாங்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்டு வெங்கடேசன் வெற்றிபெற்றார்.

கடந்த 17ம் தேதி இரவு மாடம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட கார்த்திக் நகர் பகுதியில் தெருவிளக்கு பராமரிப்பு பணியை பார்வையிட்டுவிட்டு, அவரது நண்பர்களுடன் ராகவேந்திரா நகருக்கு செல்லும் சந்திப்பில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது 3 பைக்குகளில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் வெங்கடேசன் மீது நாட்டு வெடிகுண்டை வீசியது. அங்கிருந்து தப்பி ஓடிய வெங்கடேசனை பின்தொடர்ந்து துரத்தி அவரை சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பிச்சென்றது. ரத்த வெள்ளத்தில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்த மணிமங்கலம் குற்றப்பிரிவு ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வெங்கடேசன் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் அவரது குடும்பத்தினரிடம் வெங்கடேசனின் உடல் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் தாம்பரம் காவல் துணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி, பல்லாவரம் காவல் உதவி ஆணையர் ஆரோக்கிய ரவீந்திரன் தலைமையில் ஆல்பின்ராஜ், சிவகுமார், ரஞ்சித் குமார், சந்துரு ஆகிய ஆய்வாளர்கள் கொண்ட நான்கு தனிப்படை அமைக்கப்பட்டு கொலை நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து கொலையாளிகளை தேடிவந்தனர்.

இந்நிலையில், ஆதனூர் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு அருகில் தனிப்படை போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். இதில் 6 பேர் சிக்கினர். அதேபோல, ஒரகடம் பகுதியில் ஆதனூர் கூட்டுச்சாலையில் இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு பேரையும் போலீசார் மடக்கிப் பிடித்து அவர்கள் கொலைக்காக பயன்படுத்திய மூன்று இரு சக்கர வாகனங்கள், 9 கத்திகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பிறகு பிடிபட்ட 10 பேரையும் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சகோதரர்களான பழவந்தாங்கல் பகுதியை சேர்ந்த முகமது யாகோப் (35), கூடுவாஞ்சேரி, தைலாபுரம் பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ் (32), கூடுவாஞ்சேரி, மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த முகமது இம்ரான் கான் (21), முகமது ரியாசுதீன் (25), பல்லாவரம் பகுதியை சேர்ந்த முகமது சதாம் உசேன் (24) என்பதும், கூடுவாஞ்சேரி, மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த பிரவின் குமார் (24), மாறன் (எ) மணிமாறன் (25), இமாம் (எ) மோகன்ராஜ் (20), சோழவரம் பகுதியை சேர்ந்த தனுஷ் (26), சேலம் மாவட்டத்தை சேர்ந்த அகமது பாஷா (21) என்பதும் தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட 5 சகோதரர்களின், சகோதரர்களான முகமது இஸ்மாயில், முகமது இமாம் ஆகிய இருவர் கொலை செய்யப்படுவதற்கு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தான் காரணம் என்பதால், முன்விரோதத்தில் வெங்கடேசனை இவர்கள் வெட்டி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர். முன்னதாக ஒரகடம் பகுதியில் ஆதனூர் கூட்டுச்சாலையில் போலீசார் கொலையாளிகளை பிடிக்க முயற்சித்த போது தனுஷ், முகமது சதாம் உசேன், அகமது பாஷா, இமாம் (எ) மோகன்ராஜ் தப்பி செல்ல முயன்றனர். இதில் கீழே விழுந்ததில் மூன்று பேருக்கும் கையிலும், ஒருவருக்கு காலிலும் முறிவு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் அவர்களை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துசென்று சிகிச்சை அளித்தனர். பிறகு 10 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சமாதானமாக செல்ல கொடுத்த ரூ.5 லட்சத்தை வைத்தே கொலை
முகமது யாக்கோபின் சகோதரர்களான முகமது இஸ்மாயில், முகமது இமாம் ஆகியோரது கொலைக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே சமாதானமாக செல்லலாம் எனக் கூறி வெங்கடேசன் முகமது யாக்கோபிடம் 5 லட்சம் ரூபாய் கொடுத்ததோடு, அவர்களுக்கு வீடு கட்டி தரும் செலவையும் ஏற்றுக் கொள்வதாக கூறியதாக தெரிகிறது. இதானல், முகமது யாக்கோப் மற்றும் அவரது சகோதரர்கள் வெங்கடேசனிடம் இயல்பாக பழகுவது போல் பழகி வந்துள்ளனர்.
எனவே, தனக்கு அவர்கள் மூலம் எந்த பாதிப்பும் ஏற்படாது என நம்பி வெங்கடேசன் எந்த ஒரு பாதுகாப்பும் இன்றி தனியாகவே சென்று வந்துள்ளார். ஆனால், சகோதரர்களை வெங்கடேசன்தான் ஆட்கள் வைத்து கொலை செய்திருப்பார் என எண்ணிய முகமது யாக்கோப் மற்றும் அவரது சகோதரர்கள் வெங்கடேசனுடன் இருந்தபடியே திட்டம் தீட்டி நேரம் பார்த்து அவர் கொடுத்த ஐந்து லட்சம் ரூபாய் பணத்தையே பயன்படுத்தி அவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது.

முகமது யாக்கோப் மற்றும் சகோதரர்கள் வெங்கடேசனை கொலை செய்ய திட்டம் தீட்டியது போலீசாருக்கு ஏற்கனவே தெரியும் எனவும், கொலை நடந்தபோது சிறிது தூரத்தில்தான் காவல் ரோந்து வாகனம் நின்றுள்ளது. கொலை செய்து விட்டு இருசக்கர வாகனத்தில் கொலையாளிகள் தப்பிச் செல்லும்போது அவர்களை வேகமாக சென்று பிடிக்காமல் பின்னால் மிதமான வேகத்தில் போலீஸ் வாகனம் சென்றதாகவும், தனது உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் போலீசார் பாதுகாப்பார்கள் என போலீசாரை மட்டும் நம்பி,  வெங்கடேசன் உயிரிழந்துவிட்டதாகவும் அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியினர் குற்றம் சாட்டினர்.