இ.பி.எஸ்: கொஞ்சம் கொஞ்சமாக தவழ்ந்து உயர்ந்த பதவிக்கு வந்தேன்…

மதுரையில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதச்சார்பின்மை மாநாட்டில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘கொஞ்சம் கொஞ்சமாக, தவழ்ந்து தவழ்ந்து உயர்ந்த பதவிக்கு வந்தேன்’ என்று பேசினார். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதசார்பின்மை மாநாடு மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே கொடியேற்றத்துடன் தொடங்கியது. அக்கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் மாநாட்டுக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த மாநாட்டில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் அகில இந்திய தலைவர் பைசி, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: “எஸ்டிபிஐ கட்சியின் மாநாட்டின் கூட்டத்தை பார்க்கும் போது அதிமுக வெற்றி உறுதி செய்யப்பட்டது. திமுக கூட்டணி மதச்சார்பின்மையை கடைபிடித்து வருவதாக போலி பிம்பத்தை உருவாக்கி வருகிறார்கள். நான் முதலமைச்சராவேன் என்று கனவில்கூட நினைக்கவில்லை. உங்களைப் போல நான் அமர்ந்திருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக, தவழ்ந்து தவழ்ந்து உயர்ந்த பதவிக்கு வந்தேன். அதைக்கூட கொச்சைப்படுத்தி பேசுகிறார்கள். இன்றைய முதலமைச்சர் கொச்சைப்படுத்தி பேசினார். உழைப்பென்றால் தெரியாத ஒரு முதலமைச்சர் தமிழகத்தில் ஆண்டுகொண்டிருக்கிறார். நான் கிளைச் செயலாளராக இருந்து படிப்படியாக உயர்ந்து உழைத்து கட்சிக்கு பொதுச் செயலாளராக ஆனேன். நாட்டிற்கு முதலமைச்சரானேன்.

நீங்கள் எப்படி முதலமைச்சரானீர்கள். உங்கள் அப்பா முதலமைச்சராக இருந்தார், தி.மு.க தலைவராக இருந்தார். நீ எம்.எல்.ஏ ஆனாய், இன்னைக்கு முதலமைச்சராகி இருக்கிறாய். உழைப்பு பற்றி தெரியாத ஒரு முதலமைச்சர் நாட்டு மக்களைப் பற்றி கவலைப்படாத ஒரு முதலமைச்சர், எப்போதும் வீட்டைப் பற்றி மட்டுமே கவலைப்படக் கூடிய ஒரு முதலமைச்சர் இருக்க முடியும் என்று சொன்னால் அது தமிழ்நாடு முதலமைச்சராகத்தான் இருக்க முடியும். அ.தி.மு.க சிறுபான்மையினரை அரண் போல காத்து வருகிறது. 30 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட்டது. தி.மு.க மக்களை பற்றி கவலைப்படவில்லை. குடும்பத்தினருக்காக தி.மு.க கூட்டணி வைத்துள்ளது. கடந்த காலங்களில் எவ்வளவு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கப்பட்டது. தொழில் முதலீட்டு மாநாடுகள் வாயிலாக எவ்வளவு வெளிநாட்டு முதலீடுகள் வந்துள்ளது என வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தி.மு.க மத்தியில் ஆட்சி பொறுப்புக்கு வருவதற்கு பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளன. அ.தி.மு.க ஒரு நாளும் கொள்கைகளை விட்டு கொடுக்காது. பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியே வந்ததை முதலமைச்சர் ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கூட்டணியில் இருந்து வெளியே வந்த போதிலும் முதலமைச்சர் ஸ்டாலின் அதிமுகவையும், பா.ஜ.கவையும் தொடர்புபடுத்தி பேசி வருகிறார். நாலரை ஆண்டு காலம் ஆட்சியை நடத்துவதற்கு மிகவும் துன்பப்பட்டேன்.

எதிர்வரும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக அறிவிக்கிறேன். நாடாளுமன்றத் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சியோடு அதிமுகவுடன் நிறைய கட்சிகள் வர உள்ளன. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40-க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெறும். சிறுபான்மை மக்கள் அ.தி.மு.க-வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்