கடந்த 1996ம் ஆண்டு முதல்-2001 வரை திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்
துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவருடைய மனைவி விசாலாட்சி உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் 2011ல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இந்த வழக்கில் இருந்து பொன்முடி உள்ளிட்டோரை விடுதலை செய்து கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து இதுதொடர்பாக பொன்முடி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தற்போது உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளதால் அவருக்குப் பதிலாக நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் இந்த வழக்கை விசாரித்தார். இந்த வழக்கில் வருமான வரி கணக்குகள், சொத்து மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் உட்பட 39 சாட்சிகளிடம் மேற்கொண்ட புலன் விசாரணை ஆதாரங்களை சுட்டிக்காட்டி லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதேபோல, பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், பொன்முடியின் மனைவி விசாலாட்சியின் வருமானத்தை பொன்முடியின் வருமானமாக லஞ்ச ஒழிப்புத்துறை கணக்கிட்டுள்ளது.
பொன்முடியின் மனைவிக்கு 110 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அவர் தனியாக வர்த்தகம் செய்கிறார். இவற்றை புலன் விசாரணை அதிகாரி கணக்கில் கொள்ளவில்லை என்று வாதிட்டனர். மேலும், குறிப்பிட்ட காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி எம்.ஜெயச்சந்திரன், கீழமை நீதிமன்றம் அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், இந்த வழக்கில் தண்டனை விவரங்கள் டிசம்பர் 21-ம் தேதி( இன்று) அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். அதன்படி, இந்த வழக்கில் இன்று காலை தீர்ப்பளிக்கப்பட்டது. தண்டனை விவரத்தை வாசிப்பதற்கு முன்னர் ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா என பொன்முடியிடமும் அவரது மனைவி விசாலாட்சியிடமும் நீதிபதி ஜெயச்சந்திரன் வினவினார். அப்போது எதுவும் பேசாமல் வணக்கம் வைத்தப்படி மட்டும் பொன்முடியும், அவரது மனைவி விசாலாட்சியும் நீதிபதி முன்பு நின்றனர். இவர்கள் இருவர் சார்பாக அவர்களது வழக்கறிஞர்கள் மருத்துவ அறிக்கையை சமர்பித்து தண்டனைக் காலத்தை குறைக்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடுத்தனர். தீர்ப்பில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு தலா
3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், தலா ரூ.50 லட்சம் அபராதம் விதித்தும், மேல் முறையீடு செய்ய 30 நாட்கள் கால அவகாசம் அளித்தும் தீர்ப்பளித்தார்.
இதன்மூலம், பொன்முடி அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை இழக்கிறார்.
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் ஏற்கனவே அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து பொன்முடி தனது எம்எல்ஏ பதவிக்கான தகுதியை இழந்துள்ளார். இதன் காரணமாக அமைச்சர் பதவியும் இழந்துள்ளார். மேலும் தற்போது தண்டனையை 30நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ள நீதிமன்றம், மேல் முறையீடு செய்ய கால அவகாசம் வழங்கியுள்ளது. இந்தநிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டதையடுத்து புதிதாக யாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்தது.ஏற்கனவே மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு துறை செந்தில் பாலாஜியிடம் இருந்து அமைச்சர் பொறுப்பானது அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மின்சாரத்துறையும், மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதலாக ஒதுக்கப்பட்டது. எனவே தற்போது உள்ள சூழ்நிலையில் புதிய நபர்களுக்கு அமைச்சர் பதவி வழங்காமல் பழைய அமைச்சர்களுக்கே கூடுதலாக ஒதுக்கப்படும் என தெரிகிறது. இந்தநிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் தங்கம் தென்னரசுக்கு உயர்கல்வித்துறை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிடப்படும் .