நாடாளுமன்ற அத்துமீறல் குறித்து உயர் நிலைக் குழு விசாரணை: சபாநாயகர் ஓம் பிர்லா உறுதி…

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் கடந்த 13-ம் தேதி 2 இளைஞர்கள் அத்துமீறி வண்ணப் புகை குண்டுகளை வீசியது தொடர்பாக எதிர்க்கட்சிகள் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர். மக்களவை நேற்று காலையில் கூடியதும், நாடாளுமன்றத்தில் அத்துமீறல் நடந்தது குறித்து பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். அத்துடன், அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். அவர்களை சமாதானப்படுத்த சபாநாயகர் ஓம் பிர்லா முயற்சித்தார். எனினும், தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் பிற்பகல் வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலில் அவை கூடிய போது சபாநாயகர் கூறும்போது, ”நாடாளுமன்ற அத்துமீறல் குறித்து உயர் நிலைக் குழு தீவிர விசாரணை நடத்தும். இந்த விவகாரம் அரசியலாக்கப்படுகிறது. அதை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தவிர்க்க வேண்டும். அவையில் முக்கிய அலுவல்கள் குறித்து விவாதிக்க ஒத்துழைப்பு கொடுங்கள்” என்றார். அதை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஏற்காமல் தொடர்ந்து கூச்சலிட்டனர். மேலும், வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர்.

அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா பேசும்போது, ”சபாநாயகர் இருக்கை அருகே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வந்து கோஷமிடுவதும், பதாகைகளை காட்டி கூச்சலிடுவதும் இந்த அவை மாண்பை சீர்குலைப்பதாகும். அவையை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்றார். நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி பேசும்போது, ”நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரத்தில் அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் கரம் கோத்து செயல்பட வேண்டும். பதாகைகள் காட்டுவதை தவிர்க்க வேண்டும். அலுவல் ஆய்வுக் குழு பட்டியலிட்டு அலுவல்கள் குறித்து அவையில் பேச வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன்சவுத்ரி ஆகியோர் பேசும்போது, ”நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரம் மிகவும் தீவிரமானது என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். ஆனால், அவையில் வந்துவிளக்கம் அளிக்காமல் இருக்கிறார். இதுகுறித்து அவையில் விவாதம் நடத்த அவர் வரவேண்டும். எங்களுக்கு ஒன்றே ஒன்றுதான் வேண்டும். இந்த விவகாரம் குறித்து மத்திய அரசிடம் இருந்து விளக்கம் வேண்டும். ஆனால், அரசு எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. அப்படியானால், இந்த விவகாரத்தில் யார் அரசியல் செய்வது?” என்று கேட்டனர்.