அயோத்தியில் உள்ள ராமர் கோயில் நுழைவு வாயிலில் தங்க கதவுகள் …

அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் ஜனவரி 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த பிரம்மாண்ட திறப்பு விழாவுக்கான இறுதிக்கட்ட ஆயத்த பணிகள் நடந்து வருகிறது.அதன்படி கோயில் நுழைவு வாயிலில் தங்க கதவுகள் அமைக்கும் பணியை கோவில் நிர்வாகம் தொடங்கி உள்ளது. கும்பாபிஷேக விழாவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் முதல் தங்க கதவு நிறுவப்பட்டுள்ளது. கருவறையின் மேல் தளத்தில் 12 அடி உயரமும், 8 அடி அகலமும் கொண்ட கதவு நிறுவப்பட்டுள்ளது. அடுத்த மூன்று நாட்களில், மேலும் 13 தங்க கதவுகள் அங்கு நிறுவப்படும் என்று உத்தரபிரதேச முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ராமர் கோயிலில் மொத்தம் 46 கதவுகள் நிறுவப்படும் என்றும், அதில் 42 கதவுகள் தங்கக்கதவுகள் என்றூம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் திறப்புவிழா நடைபெறும் ஜனவரி 22ஆம் தேதியன்று உத்தரப் பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விழாவை ‘தேசிய விழா’ என்று குறிப்பிட்ட முதல்வர், விழாவையொட்டி அரசு கட்டிடங்கள் அலங்கரிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். 2024 ஆம் ஆண்டின் முதல் அயோத்தி விஜயத்தின் போது, அயோத்தி நகரம், தூய்மையான மற்றும் அழகான நகரமாகத் தோன்றுவதை உறுதிசெய்யவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளின் போது தூய்மையான மற்றும் சுகாதாரமான நகரத்தை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், ஜனவரி 14 ஆம் தேதி அயோத்தியில் தூய்மைப் பிரச்சாரம் தொடங்குவதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா : பாரம்பரிய நாகர் பாணியில் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் 380 அடி நீளம் (கிழக்கு-மேற்கு திசை), 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்ட மூன்று அடுக்கு கோயிலாகும். இது மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 கதவுகள் கொண்டது. நிருத்ய மண்டபம், ரங் மண்டபம், சபா மண்டபம், பிரார்த்தனை மற்றும் கீர்த்தனை மண்டபங்கள் என 5 மண்டபடங்களை கொண்டுள்ளது. ஜனவரி 22-ம் தேதி ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற உள்ளது. அன்றைய தினம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ராமர் கோயிலின் நுழைவு வாயிலில் யானைகள், சிங்கங்கள், அனுமன் மற்றும் கருடன் சிலைகள், விஷ்ணுவின் ‘வாகனம்’ ஆகியவை நிறுவப்பட்டுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார். அவர் மதியம் 12.15 மணியளவில் ராமர் கோவிலின் கருவறையில் சடங்குகளைச் செய்ய உள்ளார். கோயில் அறக்கட்டளை, ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் அழைப்பாளர் பட்டியலில் அரசியல்வாதிகள், பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பலர் உட்பட 7,000 பேர் உள்ளன. கிட்டத்தட்ட 3000 விவிஐபிக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர். நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஒளிபரப்பப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.