உலகம் முழுவதும் உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு – ஐக்கிய நாடுகள் சபை ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

புதுடில்லி:ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் எப்.ஏ.ஓ., எனும் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ‘உலக உணவு விலை குறியீடு’ கடந்த மாதம் மூன்று சதவீதம் உயர்ந்து, 124.40 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு, இதுவே அதிக சதவீத உயர்வாகும். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இது 120.70 புள்ளிகளாக இருந்தது. தானியங்கள், சர்க்கரை, இறைச்சி, பால், தாவர எண்ணெய் ஆகிய ஐந்து உணவு பிரிவுகளின் விலையில் ஏற்படும் மாற்றங்களை கணக்கில் கொண்டு, எப்.ஏ.ஓ., மாதந்தோறும் உணவு விலை குறியீட்டை வெளியிட்டு வருகிறது. கடந்த மாதத்துக்கான அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:செப்டம்பரில் உணவு விலை குறியீடு, கிட்டத்தட்ட மூன்று சதவீதம் அதிகரித்துள்ளது.

ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக, கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் இக்குறியீடு கடும் உயர்வைக் கண்டது. அதன் பிறகு தற்போது தான், ஒரு மாதத்தில் அதிக சதவீத உயர்வை பதிவு செய்துள்ளது. சர்க்கரை விலை குறியீடு 10.40 சதவீதம் அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. பிரேசிலில் கரும்பு சாகுபடி மோசமாக உள்ளதாலும்; இந்தியாவில் எத்தனால் தயாரிப்பில் சர்க்கரையை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் ஏற்றுமதி பாதிக்கப்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பினாலும், கடந்த மாதம் சர்க்கரை விலை அதிகரித்து உள்ளது. கோதுமை, பனை, சூரியகாந்தி, பலாப்பழம் போன்ற பயிர்களின் சாகுபடி குறையலாம் என்ற எதிர்பார்ப்பால், தாவர எண்ணெய் மற்றும் தானியங்களின் விலையும் சற்றே உயர்ந்தன.வினியோக தட்டுப்பாடு, கடல் வழி வர்த்தக போக்குவரத்தில் உள்ள சிக்கல்கள் ஆகியவை, விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளன. மோசமான வானிலை, பதற்றமான புவிசார் அரசியல் சூழல் உள்ளிட்ட காரணங்களால், உணவு பொருட்கள் விலை அதிகரித்த நிலையிலேயே தொடர வாய்ப்புள்ளது.இவ்வாறு தெரிவித்து உள்ளது.