ஜெய்ப்பூர்-மும்பை விரைவு ரயிலில் ஆர்.பி.எஃப். வீரர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியானார்கள். மகாராஷ்டிர மாநிலம், ஜெய்ப்பூரில் இருந்து மும்பைக்கு விரைவு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் பல்கார் ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை 5.23 மணியளவில் வந்து கொண்டிருந்தபோது அதில் பயணித்த ஆர்.பி.எஃப். வீரர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில் 4 பேர் பலியானார்கள்.
துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு ரயிலில் இருந்து குதித்து தப்பிக்க முயன்ற ரயில்வே பாதுகாப்புப் படை வீரரை போலீசார் கைது செய்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பயணிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய காவலரிடம் போரிவலி காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேற்கு ரயில்வேயின் தலைமை பிஆர்ஓ சுமித் தாக்குர் கூறுகையில், இந்த சம்பவத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றார். பி5 கோச்சில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிரத்தில் ஓடும் ரயிலில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.