கோவை மாநகராட்சியில் ரோடுகளைச் சீரமைக்காமலேயே, பணம் எடுத்ததாக மீண்டும் புகார் எழுந்து உள்ளது.
கோவை மாநகராட்சியில், 2019 – 2020 ல், தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தில், வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 38, 39, 40 மற்றும் 44 ஆகிய வார்டுகளில், 16 ரோடுகளைச் சீரமைக்க ரூ.1.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அந்தப் பணிகள் முடிவு பெற்றதாகக் கூறி, கான்ட்ராக்டருக்கு, ரூ.1.82 கோடி பணமும் பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது. பணிகள் முடிந்து விட்டதாக, எம்.புத்தகத்திலும் தகவல் பதிவிடப்பட்டு உள்ளது. பீளமேடு, ஆவாரம்பாளையம், நல்லாம்பாளையம் பகுதிகளில் இந்த ரோடுகள் அமைந்து உள்ளன.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், இந்தத் தகவல்களை வாங்கிய சமூக ஆர்வலர்கள், இந்த 16 ரோடுகளையும் ஆய்வு செய்த போது, எந்த ரோடுமே சீரமைக்கப்படவில்லை என்று தெரியவந்து உள்ளது.
பார்க், மருதம் நகர், அமிர்தா டிஸ்பென்சரி ரோடு, நீம் லேண்ட், பாலாஜி நகர், புதுத்தோட்டம் 2 வது வீதி, பி.ஆர்.பி.,கார்டன் நகர், அண்ணப்பன் நகர், செங்காளியப்பன் அவென்யூ, ரங்கநாதபுரம் மெயின்ரோடு, குலாளர் நகர், இளங்கோ நகர், ஜி.டி.காலனி தெற்குத் தெரு ஆகிய பகுதிகளில், ஒன்றரை கி.மீ., துாரத்துக்கு ரோடு போடாமலேயே, போட்டதாக கணக்குக் காட்டப்பட்டு, பணம் எடுக்கப்பட்டு உள்ளது.
குறிப்பிட்ட இந்த பகுதிகளின் மக்களிடம் விசாரித்த போது, கடந்த பத்தாண்டுகளாக அப்பகுதியில் ரோடு எதுவும் சீரமைக்கப்படவில்லை என்று கூறுகின்றனர். இதில் அப்போது இருந்த மாநகரப் பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவிப் பொறியாளர் என பலருக்கும் பங்கு உள்ளதாக புகார் கிளம்பி உள்ளது.
கடந்த ஆட்சியில் நடந்ததாகக் கூறப்படும், இந்த ஊழல் புகாரின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய, தற்போதைய மாநகராட்சி அதிகாரிகள், இதை மறைத்து, அதிகாரிகளைக் காப்பாற்றவே முயல்வதாகத் தெரிகிறது. இந்த ரோடுகளுக்குப் பதிலாக, வேறு இடங்களில் ரோடு போட்டு இருப்பதாக, அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் அதற்கான ஆதார ஆவணங்களும் இல்லை.
இப்போது புகார் எழுந்து உள்ள நிலையில், இந்த பட்டியலில் உள்ள சில ரோடுகளைச் சீரமைக்க வேலை துவங்கி இருப்பதாகத் தெரியவந்து உள்ளது. 2016 – 2021 இடையில், மத்திய மண்டலம் தவிர்த்த நான்கு மண்டலங்களில், 552 கி.மீ., துாரத்துக்கு ரூ.280 கோடி மதிப்பில், 350 ரோடுகள் போட்டதாக, தகவல் தரப்பட்டு உள்ளது. அனைத்தையும் ஆய்வு செய்வது, அதிகாரிகளின் அவசரக் கடமையாகும்.
கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப்பிடம் கேட்டபோது, “இந்த புகார் வந்ததும், ‘எம்.புக் எல்லாவற்றையும் ஆய்வு செய்தேன். அந்த ரோடுகளில் பணிகள் நடக்கவில்லை; ஆனால் அதே தொகைக்கு, வேறு ரோடுகளில் பணிகள் நடந்து உள்ளது. இப்படிச் செய்யும் போது, ‘டீவியேஷன் நோட்’ போட்டு, அதற்கு அனுமதி பெற்று இருக்க வேண்டும். அப்படி எதுவும் பெறாதது தவறு தான். அதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பிட்ட அந்த 16 ரோடுகளில், வேலை முடிந்ததாக எம்.புத்தகத்தில் பதிவு செய்யப்படவில்லை,” என்றார்.