மருத்துவக் கல்லூரிகளில் ரூ.200 கோடி உடல் உறுப்பு வர்த்தகம்..? பாஜக அதிர்ச்சி தகவல்..!

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கர் மருத்துவமனையில் கடந்த மாதம் 9-ம் தேதி 31 வயது பயிற்சி பெண் டாக்டர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

டாக்டர் படுகொலைக்கு நீதிவேண்டி கொல்கத்தா டாக்டர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் தனது பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பெண் டாக்டர் படுகொலை செய்யப்பட்ட மருத்துவமனையில் தலைவராக இருந்த சந்தீப் கோஷ் முறைகேடு செய்ததாக சி.பி.ஐ-யால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தீப் கோஷ் மருத்துவமனை பயோ கழிவுகளை அண்டை நாட்டிற்கு விற்பனை செய்து பணம் சம்பாதித்ததாக அம்மருத்துவமனையில் பணியாற்றிய ஒருவர் குற்றம்சாட்டி இருந்தார்.

அதன் அடிப்படையில்தான் சந்தீப் கோஷ் கைது செய்யப்பட்டு இருந்தார். சந்தீப் கோஷிற்கு உடல் உறுப்பு மோசடியில் தொடர்பு இருப்பதாக பா.ஜ.க குற்றம்சாட்டி இருக்கிறது. இது குறித்து பா.ஜ.க ஐ.டி பிரிவு தலைவர் அமித் மால்வியா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், `சி.பி.ஐ ஆர்.ஜி கர் மருத்துவமனையில் நடத்திய விசாரணையில் உடல் உறுப்பு வர்த்தகம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதில் மம்தா பானர்ஜிக்கு என்ன பங்கு இருக்கிறது என்பதை தெளிவுபடுத்தவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு மம்தா பானர்ஜி அரசிடம் அமித் மால்வியா பல்வேறு கேள்விகளை கேட்டு இருக்கிறார்.

ஆர்.ஜி கர் மருத்துவமனை படுகொலை தொடர்பாக சி.பி.ஐ நடத்திய விசாரணையில் கொல்கத்தா மருத்துவக் கல்லூரிகளில் 200 கோடி ரூபாய் அளவுக்கு உடல் உறுப்பு வர்த்தகம் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதில் மூளையாக செயல்பட்ட ஆர்.ஜி.கர் மருத்துவமனை முன்னாள் தலைவர் சந்தீப் கோஷை மேற்கு வங்க அரசு பாதுகாக்க விரும்புகிறது. மருத்துவக் கல்லூரியில் சந்தீப் கோஷ் உடல் உறுப்பு வர்த்தகம் செய்வதை ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மாணவி கண்டுபிடித்ததால்தான் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உடல் உறுப்பு வர்த்தகத்தில் பயனடைந்து இருப்பதால்தான் சந்தீப் கோஷை பாதுகாக்க மம்தா பானர்ஜி விரும்புகிறாரா?. எல்லாம் மம்தா பானர்ஜியின் தயவில்தான் நடக்கிறதா?

மேற்கு வங்க சுகாதாரத்துறை அமைச்சருக்கு நிச்சயம் இது தெரிந்திருக்கும். அவருக்கு அப்படி தெரிந்திருக்கவில்லையெனில், அவர் திறமையற்றவர். அவரை உடனே பதவியில் இருந்து நீக்கவேண்டும். பெண் டாக்டர் படுகொலை செய்யப்பட்ட இரவில் பணியில் இருந்த 3 டாக்டர்களிடம் சி.பி.ஐ விசாரிக்கவேண்டும். மூன்று பேரும் வலுவான அரசியல் தொடர்புடையவர்கள்” என்று தெரிவித்துள்ளார். சி.பி.ஐ நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணையில் மேற்கு வங்க மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உரிமை கோரப்படாத உடல்களில் இருக்கும் உறுப்புகளை எடுத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது.

இது பல ஆண்டுகளாக நடந்து வந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சந்தீப் கோஷிற்கு நெருக்கமான இரண்டு பேரை அடையாளம் கண்டு அவர்களிடம் சி.பி.ஐ விசாரணை நடத்தி இருக்கிறது. இந்த விசாரணையில் உடல் உறுப்பு வர்த்தகம் நடந்திருப்பதற்கு வலுவான ஆதாரம் கிடைத்திருப்பதாக சி.பி.ஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சி.பி.ஐ கண்டுபிடித்துள்ள இந்த உண்மைகள் மம்தா பானர்ஜிக்கு மேலும் நெருக்கடியை கொடுத்துள்ளது.

ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் டாக்டர் இறந்தவுடன் சந்தீப் கோஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அவரை உடனே கொல்கத்தா மருத்துவக் கல்லூரி தலைவராக மம்தா பானர்ஜி அவசர அவசரமாக நியமித்தார். ஆனால் அவரை பணியில் சேர விடாமல் அம்மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். டாக்டர்களின் தொடர் போராட்டத்திற்கு பிறகு அவர் பணியில் சேரவில்லை. அதோடு சந்தீப் கோஷ் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.