செந்தில் பாலாஜியின் தம்பிக்கு சொந்தமான இடத்தில் சோதனை நடத்தியதில், ரூ.30 கோடி மதிப்பிலான சொத்தை ரூ.10 லட்சத்துக்கு கணக்கு காட்டியிருப்பது அமலாக்கத்துறை விசாரணையில் வெளிவந்துள்ளது.
அந்த இடத்தில் கட்டப்பட்ட ஆடம்பர பங்களாதான் இப்போது செந்தில் பாலாஜிக்கு செக் வைத்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதையடுத்து பைபாஸ் அறுவை சிகிச்சை முடிந்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 7ஆம் தேதி இரவு முதல் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
4வது நாளாக நேற்றும் செந்தில் பாலாஜியிடம், சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை கொண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது, இதுபோல், வேறெங்கெல்லாம் சொத்துக்கள் வாங்கப்பட்டிருக்கிறது, யாரிடம் இருந்து அந்த சொத்துக்கள் வாங்கப்பட்டது, வெளிநாட்டில் ஏதும் முதலீடுகள் செய்யப்பட்டிருக்கிறதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கேள்விகளை எழுப்பி விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு கரூரில், செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார், தனது மனைவி பெயரில் புதிதாக கட்டி வரும் பங்களாவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். உடன், பொதுப்பணித்துறை பொறியாளர்கள், நில அளவையர்களையும் அழைத்து சென்று அந்த நிலத்தை அளவீடு செய்து மதிப்பீடு செய்தனர். இதில், செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் ரூ.30 கோடி மதிப்பிலான அந்த நிலத்தை வெறும் ரூ.10 லட்சத்துக்கு கணக்கு காட்டியிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்தது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதன் அடிப்படையில், அமலாக்கத்துறையும் விசாரணையை தொடங்கியது. செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார், அவரது உதவியாளர்கள் பி.சண்முகம், எம்.கார்த்திக்கேயன் ஆகியோருடன் இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
மேலும், பண மோசடி தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, அசோக்குமாரின் மாமியார் லட்சுமி, தனது பழைய நகைகளை விற்று, அதன் மூலம் கிடைத்த பணத்தில், அனுராதா ரமேஷ் என்பவரிடம் இருந்து, கரூர் ஆண்டாங்கோவில் சேலம் பைபாஸ் சாலையில் 2.49 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை ரூ.10 லட்சத்துக்கு வாங்கியிருப்பதாக அந்த ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.
மேலும், அந்த நிலத்தை லட்சுமி தனது மகளான அசோக்குமாரின் மனைவி நிர்மலாவுக்கு பரிசாக வழங்கியிருப்பதாகவும் அதில் தெரிவித்துள்ளார். ஆனால், இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அந்த நிலத்தின் உண்மையான மதிப்பு ரூ.30 கோடி என்பதும், நிலத்தை வாங்குவதற்கு ரூ.10 லட்சம் போக, மீதமுள்ள பணத்தை ரொக்கமாக, அனுராதா ரமேஷ்க்கு அவர் வழங்கி இருப்பதும், அந்த பணத்தை வைத்து அனுராதா ரமேஷ் அதே பகுதியில் மற்றொரு நிலத்தை வாங்கியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, ரூ.30 கோடி மதிப்பிலான அந்த சொத்து முடக்கப்பட்டுள்ளது.
சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அசோக்குமார், அவரது மனைவி நிர்மலா, அசோக்குமாரின் மாமியார் லட்சுமி ஆகியோரை விசாரணைக்கு ஆஜராக பலமுறை சம்மன் அனுப்பியும் அவர்கள் ஆஜராகவில்லை. இதன்மூலம், அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்பது நிரூபணமாகிறது. தொடர்ந்து, இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஏதாவது ஒரு இடத்தையோ, நிலத்தையோ, வீட்டையோ வாங்கும் முன்பாக நன்றாக ஆராய்ந்து வாங்க வேண்டும். அவசரகதியில் வாங்கி அதில் ஆடம்பர பங்களா கட்டியதே செந்தில் பாலாஜி மீது பலரது பார்வையும் விழுவதற்கு காரணமாக அமைந்தது. அடுத்தடுத்து அமலாக்கத்துறை சோதனையில் சிக்கி இப்போது சிறைக்கு சென்றுள்ளார் செந்தில் பாலாஜி. இதிலிருந்து செந்தில் பாலாஜி எப்படி மீளப்போகிறார் என்பதுதான் திமுகவினரின் கேள்வியாக உள்ளது.